மேலும்

பௌத்த பேரினவாதத்துக்கு எதிராக முல்லைத்தீவில் பாரிய கண்டனப் பேரணி

நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து, நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் புனிதத்தை கெடுக்கும் வகையில் தீர்த்தக் கேணியில் பௌத்த பிக்குவின்  சடலத்தை எரித்த சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முல்லைத்தீவில் இன்று பாரிய கண்டன பேரணி இடம்பெற்றது.

தமிழர் மரபுரிமை பேரவையின் அழைப்பின் பேரில் இன்று காலை 11 மணிக்கு இந்த கண்டன பேரணி ஆரம்பமானது.

நீதிமன்றின் தீர்ப்பை அவமதித்து, சிறிலங்கா காவல்துறையினரின் ஆதரவுடன், பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கேணியில் பௌத்த பிக்குவின் சடலத்தை எரித்தமையை கண்டித்தும் , இதற்குத் துணைபோன சிறிலங்கா காவல்துறையினருக்கு எதிர்ப்புத் தெரிவித்தும்,  சட்டவாளர்கள்

மற்றும் ஆலய பூசகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையை கண்டித்தும்-  இந்த மாபெரும் கண்டன பேரணி முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் முன்பாக ஆரம்பித்து, நீதிமன்ற வீதியூடாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்றடைந்தது.

போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் “கைது செய் கைது செய் ஞானசார தேரரை கைது செய்” , “இலங்கை பொலிஸாரே தமிழ் மக்களுக்கு ஒரு சட்டமா ?” “ ஒழிக ஒழிக பௌத்த அராஜகம் ஒழிக ” ,“வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்” , “பௌத்தருக்கு ஒரு சட்டம் தமிழருக்கு ஒரு சட்டமா?” என்ற முழக்கங்களை எழுப்பியவாறும் ,பதாதைகளை தங்கியவாறும் மாவட்ட செயலக வாயில் வரை சென்றனர் .

இறுதியில் தமிழர் மரபுரிமை பேரவையினர் மதத்தலைவர்கள் இணைந்து சிறிலங்கா அதிபருக்கும்,  ஐ.நா வதிவிட பிரதிநிதிக்கும் கையளிப்பதற்கான மனுவை, முல்லைத்தீவு மாவட்ட செயலக நிர்வாக அதிகாரியிடம் கையளித்தனர் .

இந்த கண்டன பேரணியில், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் , நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறிஸ்கந்தராஜா , சிவசக்தி ஆனந்தன் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், சர்வமத தலைவர்கள், சிவில் அமைப்புகள், வர்த்தகர்கள் உள்ளிட்ட 2000 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களும் இளைஞர்களும் மாவட்ட செயலகம் முன்பாக, ஞானசார தேரரின் படத்துக்கு செருப்பால் அடித்து தீயிட்டு கொளுத்தி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவாக முல்லைத்தீவு வணிகர்கள் தமது கடைகளை அடைத்து பூரண ஆதரவை வெளியிட்டிருந்தனர் .

அதேவேளை, பௌத்த பேரினவாதிகளால் சட்டத்தரணிகள் தாக்கப்பட்டதை கண்டித்து நேற்று வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பணியாற்றும் சட்டவாளர்கள், பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஞானசார தேரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *