போர்க்குற்ற விசாரணையில் நம்பத்தன்மை
இலங்கை இராணுவம் நடத்திய கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக வந்திருந்த தெற்காசிய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த ஆய்வாளரும், இலங்கையில் இந்திய அமைதிப்படையில் பணியாற்றியவருமான மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா, போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது முக்கியமானது என்பதை வலியுறுத்தியிருக்கிறார்.
கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கில் அவர் இதனை வலியுறுத்தவில்லை. அதற்கு வெளியே, ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் இந்தக் கருத்தை அவர் வெளியிட்டிருக்கிறார்.
அண்மையில், இலங்கையின் இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதை அடுத்து, போர்க்குற்ற விசாரணைகள் பற்றிய விவகாரம் மீண்டும் சூடுபிடித்திருக்கிறது.
நம்பகமான போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டது குறித்து அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கவலை வெளியிட்டன. ஐ.நா அமைப்புகளும் எதிர்ப்பை வெளிப்படுத்தின.
ஆனாலும், இராணுவத் தளபதி நியமனத்தில் வெளியார் எவரும் தலையிடும் உரிமை கிடையாது என்றும், அது நாட்டின் இறைமைக்குரிய விவகாரம் என்றும் அரசாங்கம் நிராகரித்து விட்டது.
லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து எந்த விசாரணைகளும் நடத்தப்படாமலேயே அது பொய்யானது என்றும், அது நிரூபிக்கப்பட்டு விட்டது என்றும் அரச தரப்பிலுள்ளவர்கள், எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் பலர் கூறியிருந்தனர்.
ஆனால், இதுவரையில் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான நம்பகமான எந்தவொரு விசாரணைகளையும் அரசாங்கம் நடத்தவேயில்லை என்பது தான் உண்மை.
2015இல் ஜெனிவாவில், இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு நீதிபதிகள், விசாரணையாளர்கள், வழக்குத்தொடுனர்களை உள்ளடக்கிய – சுயதீனமான நம்பகமான விசாரணைகளை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது.
அதற்குப் பின்னர், வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணைகளில் அனுமதிக்க முடியாது என்று அடம் பிடித்ததே தவிர, உள்நாட்டு விசாரணையையேனும் நடத்த முற்படவில்லை.
காலத்தைக் கடத்துவதில் கவனம் செலுத்துகிறதே தவிர, போர்க்குற்றச்சாட்டுகள், மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் குறித்த எந்த விசாரணைகளுக்கும் அரசாங்கம் இன்று வரை தயாராக இல்லை.
இந்த விடயத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுத்தல், சர்வதேசத்துக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுதல் ஆகிய இரண்டிலுமே இலங்கை அரசாங்கம் தோல்வியைச் சந்தித்திருக்கிறது.
அரசாங்கத்துக்குள் இருக்கும் உள்ளக மோதல்களை பயன்படுத்தி, பிரதமர் ரணில் தரப்பும், ஜனாதிபதி மைத்திரிபால தரப்பும் இதற்கு தாம் காரணமல்ல, மறு தரப்பே காரணம் என்று குற்றம்சாட்டுவதில் கவனமாக இருக்கின்றன.
இரண்டு பேரும் இணைந்து அங்கம் வகித்த அரசாங்கத்தின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற கரிசனையோ பொறுப்போ இரு தரப்புகளிடமும் இல்லை.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் தான், லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார். வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வந்த அரசாங்கத்துக்கு, கட்டுப் போடுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக, இதனை மேற்குலக நாடுகளும், ஐ.நாவும் பயன்படுத்திக் கொண்டன.
தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவுக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்ற இந்தச் சூழலில், இந்த அரசாங்கத்திடம் போர்க்குற்ற விசாரணைகளை நடத்துமாறு கோருவதோ, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கோருவதோ அர்த்தமற்றது.
ஏனெனில், இந்த அரசாங்கம் பதவியில் இருந்த நான்கரை ஆண்டுகளிலும் அதனை செய்யத் தவறிவிட்டது. இனிமேல் அதனைச் செய்யப் போவதும் இல்லை. அதற்கான காலஅவகாசமும் இல்லை.
நீடித்த சமாதானத்துக்கு, நிலைமாறுகால நீதி மற்றும் நல்லிணக்கம் என்பன முக்கியமான அம்சங்கள் எனக் கூறியுள்ள மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா, அதனை இலங்கை அரசாங்கம் தீவிரமாக பின்பற்றுவதை அவதானிக்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார்.
இந்தநிலையில் தான், புதிய அரசாங்கம் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளை நடத்த வேண்டும் என்பதை அவர் வலியுறுத்திக் கூறியிருக்கிறார். அதற்கான சில ஆலோசனைகளையும் அவர் முன்வைத்திருக்கிறார்.
‘நல்லிணக்கம் மற்றும் நிலைமாறுகால நீதிக்கு ஒரு முழு செயல்முறை உள்ளது, அது முதலில் தொடங்கப்பட வேண்டும். அடுத்ததாக, தீவிரமாகவும், நேர்மையாகவும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மாத்திரமன்றி, ஒட்டுமொத்தமாக இராணுவத்துக்கு எதிராக சுமத்தப்படுகின்ற போர்க்குற்றச்சாட்டுகள் குறித்தும் புதிய அரசாங்கத்தினால் விசாரிக்கப்பட வேண்டும் என்பதே மேஜர் ஜெனரல் அசோக் மேத்தாவின் நிலைப்பாடாக உள்ளது.
ஆனால், ஐ.நாவுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய, விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கின்ற அவர், இந்த போர்க்குற்ற விசாரணைகள், வெளிநாட்டுப் பங்களிப்புடன் தான் நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவில்லை.
அவரைப் பொறுத்தவரையில் போர்க்குற்ற விசாரணைகள் வெளிப்படையானதாகவும், நேர்மையானதாகவும் இருக்க வேண்டும் என்பதே தவிர, வெளிநாட்டு பங்களிப்பின் அவசியத்தில் ஆர்வம் காட்டவில்லை. உள்நாட்டு விசாரணைகளை நடத்துவது முக்கியம் என்பது அவரது கருத்தாக உள்ளது.
ஒரு நாடு வெளிப்படையான, நியாயமான, நம்பகமான சொந்த செயல்முறையைக் கொண்டிருப்பதற்கு முற்றிலும் சட்டபூர்வ உரிமை உள்ளது என்று மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா கூறியிருக்கிறார்.
இவரது இந்தக் கருத்தை இப்போதைய அரசாங்கமும் சரி, புதிதாக பொறுப்புக்கு வரப்போகும் அரசாங்கமும் சரி, காது கொடுத்துக் கேட்குமா என்பது சந்தேகம் தான்.
ஏனென்றால், போர்க்குற்றங்களை முற்றாக நிராகரித்த முன்னைய அரசாங்கம், போர் முடிந்து ஐந்து ஆண்டுகளாக, குற்றச்சாட்டுகளை விசாரிக்க நம்பகமான எந்த முயற்சியையும் முன்னெடுக்கவில்லை.
போரின் போது மீறல்கள் நிகழ்ந்துள்ளன என்பதை ஏற்றுக்கொண்ட தற்போதைய அரசாங்கமும், அதனை விசாரிக்கவோ, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவோ முற்படவில்லை.
ஆக, இரண்டு தரப்புகளும் காலத்தைக் கடத்தி இந்த விவகாரத்தை மறந்து போகச் செய்வதில் அக்கறை கொண்டிருந்தனவே தவிர, நம்பகமான ஒரு பொறிமுறையை உருவாக்கி பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபடவில்லை.
இந்தநிலையில், புதிய அரசாங்கத்தை இந்த இரண்டு தரப்புகளைத் தாண்டி- மூன்றாவது தரப்பு ஒன்று அமைக்கப் போவதில்லை என்பது உறுதி.
எனவே, கடந்த 10 ஆண்டுகளில் இந்த விசாரணைகளை நடத்தாமல் வெற்றிகரமாக இழுத்தடித்து வந்துவிட்டனர், அடுத்த அரசாங்கத்தில் அதனை நடத்துவார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.
இது ஒரு புறத்தில் இருக்க, மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா கூறியிருப்பது போல, உள்நாட்டு விசாரணையை நம்பகமாக நடத்தும் தகைமையை இலங்கை கொண்டிருக்கிறதா என்பதையும் சற்று கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புகள் தொடர்பாக, உண்மையான குற்றவாளிகளை கண்டறியும் நியாயமான விசாரணைகள் நடத்தப்படவில்லை என்பது பொதுவான குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.
சிறப்பு ஜனாதிபதி விசாரணைக் குழு ஒன்று விசாரணை நடத்தி அறிக்கை கொடுத்தது. இந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் சில நடவடிக்கைகைள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த பின்னர் தான், அந்தக் குழு அமைக்கப்பட்டதே சட்டப்படி செல்லாது என்று ஒத்துக் கொண்டிருக்கிறார் அந்தக் குழுவின் தலைவர்.
நாடாளுமன்ற தெரிவுக்குழு மற்றொரு விசாரணையை நடத்திக் கொண்டிருக்கிறது, பொலிஸ் மற்றும் புலனாய்வு அமைப்புகளும் தனித்தனியாக விசாரணைகளை நடத்துகின்றன.
இவை போதாது என்று தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் புதிய விசாரணை நடத்தப்படும் என்று மகிந்த ராஜபக்சவும் கூறியிருக்கிறார்.
தற்போதைய விசாரணைகளில் நம்பிக்கையில்லை, சுதந்திரமான விசாரணைக் குழுவொன்றை நியமிக்குமாறு பேராயர் மல்கம் ரஞ்சித் கோரியிருந்தார். அதனை ஏற்றுக் கொள்வதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாய ராஜபக்ச கூறியிருக்கிறார்.
ஆக, 21/4 தாக்குதல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் உள்ளக விசாரணைகள் பல தரப்பினருக்கு நம்பகமானதாக இருக்கவில்லை. பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இவ்வாறான நிலையில், போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த உள்ளக விசாரணை மீது, பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழ் மக்கள் நம்பகமான விசாரணையை கோருவதும், அது வெளிநாட்டுப் பங்களிப்புடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதிலும் எந்த தவறும் இல்லை.
உள்ளக விசாரணைகளின் மீது நம்பிக்கை கொள்ளக் கூடிய வகையில் நேர்மையுடனும் பக்கசார்பின்றியும் செயற்பட முடியும் என்ற உறுதியைக் கொடுக்க முடியாத ஒரு அரசாங்கத்திடம் இருந்து, மக்கள் வெளியில் இருந்தே நீதியை எதிர்பார்ப்பார்கள். அதனை தான் போர்க்குற்ற விசாரணைகளிலும் எதிர்பார்க்கிறார்கள்.
-சுபத்ரா
வழிமூலம் – வீரகேசரி வாரவெளியீடு