பலாலியில் இருந்து கொச்சின், மும்பை, டெல்லிக்கே விமான சேவை
யாழ்ப்பாணத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படுவதுடன், பலாலி அனைத்துலக விமான நிலையம் வரும் ஒக்ரோபர் 16ஆம் நாள் செயற்பட ஆரம்பிக்கும் என்று சிறிலங்கா விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் எச்எம்சி நிமலசிறி தெரிவித்துள்ளார்.
”பலாலி விமான நிலையத்தை இயக்குவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் இறுதி செய்யப்பட்டுள்ளன. பலாலியில் இருந்து கொச்சின், மும்பை, புதுடெல்லிக்கு விமானங்கள் இயக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்தியாவின் அலையன்ஸ் எயர் மற்றும் இன்டிகோ ஆகிய நிறுவனங்கள் பலாலியில் இருந்து விமான சேவைகளை ஆரம்பிக்க பேச்சுக்களை நடத்தி வருவதாக போக்குவரத்து மற்று விமான சேவைகள் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதற்குப் பின்னர் ஏனைய பிராந்திய விமான சேவைகள் யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதற்கிடையே, பலாலி விமான நிலையத்தில் பணியாற்றுவதற்குத் தேவையான தமது திணைக்களத்தின் அதிகாரிகள் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாககுடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் பசன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சுங்கத் திணைக்களமும் பலாலியில் தமது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருகிறது.
அதேவேளை, பலாலி விமான நிலையத்தில் சுங்கத் தீர்வையற்ற வணிக நிலையமும், அமைக்கப்படவுள்ளது.