குண்டுதாரிகளை விட்டு விட்டு கோத்தாவை குடைகிறது சிஐடி – மகிந்த குற்றச்சாட்டு
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் கவனம் செலுத்தாமல், கோத்தாபய ராஜபக்சவின் மீதே குற்ற விசாரணைத் திணைக்களம் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது என பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
“கோத்தாபய ராஜபக்சவின் கடவுச்சீட்டு தொடர்பான பொய்யான குற்றச்சாட்டுகள் குறித்து குற்ற விசாரணைத் திணைக்களம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது.
அவர்கள், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் கவனம் செலுத்தவில்லை.
முன்னைய அரசாங்கத்தின் உறுப்பினர்களை பழிவாங்குவதிலேயே அரசாங்கம் தீவிரமாக உள்ளது.
விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த பின்னர் நாட்டில் அமைதி நிலவியது. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர் அந்த அமைதி குலைந்து போய் விட்டது.
அரசாங்கத்தில் உள்ள யாருமே இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கத் தயாரில்லை. ஒருவர் மீது மற்றவர் கைகாட்டி தப்பிக் கொள்ள முனைகின்றனர்.” என்றும் அவர் கூறினார்.