மேலும்

பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – உச்சநீதிமன்றம்

பழைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையின் அடிப்படையில், மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியாது என்று, சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, உச்சநீதிமன்றம் இது தொடர்பான வியாக்கியானத்தை அளித்துள்ளது.

மாகாணசபைகளுக்கான தேர்தலை கலப்பு முறையில் நடத்துவதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போதும், தேர்தல்களை நடத்துவதற்காக, எல்லைகளை வரையறை செய்யும் குழுவின்  அறிக்கை இன்னமும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

இதனால் பழைய முறையில் தேர்தலுக்கு உத்தரவிடும் வாய்ப்பு உள்ளதா என, உச்சநீதிமன்றத்திடம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விளக்கம் கோரியிருந்தார்.

இதுதொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்களைக் கொண்ட குழு கடந்த மாதம் 23 ஆம் நாள், அமர்வு ஒன்றை நடத்தி விசாரித்து, பல்வேறு தரப்புகளினதும் கருத்துக்களை கேட்டது.

இதையடுத்து, தமது முடிவை சிறிலங்கா அதிபருக்கு அனுப்பியிருந்தது.

அந்த விளக்கத்திலேயே, பழைய முறையில் மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியாது என்றும், அவ்வாறு உத்தரவிடும் அதிகாரம் சிறிலங்கா அதிபருக்கு இல்லை என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது,

ஒரு கருத்து “பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – உச்சநீதிமன்றம்”

  1. வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன் says:

    புதிய முறை வடக்கில் தமிழரைப் பாதிக்காது. கிழக்கில் தமிழரையும் முஸ்லிம்களையும் ஓரளவு பாதிக்கலாம். அம்பாறை மாவட்டத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் தமிழரும் முஸ்லிம்களுக்கும் புரிந்துணர்வு ஏற்பாடுகள் இல்லாவிட்டால் பாதிப்புகள் ஏற்படும். புதிய முறை தென் இலங்கை முஸ்லிம்களையும் மலையக தமிழரையும் வடமாகாண முஸ்லிம்களையும் அதிகம் பாதிக்கும்.
    பழைய தேர்தல் முறைதான் தந்தை செல்வநாயகத்தின் தமிழ் முஸ்லிம் நல்லுறவு அணுகுமுறைக்கு பலமாக இருந்த முறைமை. தமிழரைவிட முஸ்லிம் வேட்பாளர்களுக்கு அதிக தமிழ் வாக்காளர்களின் ஆதரவு அவசியப்படும். தென்னிலங்கையில் மலையக தமிழர்களும் முஸ்லிம்களும் தேசிய கட்ச்சிகளில் தங்கியிருக்கும் நிலை மேலும் வலுப்பெறும்.

Leave a Reply to வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *