மேலும்

வவுனியா விமானப்படைத் தளம் மீது கண் வைக்கும் ரஷ்யா

வவுனியா விமானப்படை தளத்தில், உலங்குவானூர்திகளைப் பழுதுபார்க்கும் பிரிவு ஒன்றை உருவாக்குவது தொடர்பாக, ரஷ்ய அரசுத்துறை நிறுவனமான, Rosoborone  சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சிடம் யோசனை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. உள்நாட்டு பிரதிநிதி மூலமாகவே சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சிடம் இந்தத் திட்டத்தை ரஷ்ய நிறுவனம் சமர்ப்பித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

இந்த திட்ட முன்மொழிவு 2015ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த உலங்குவானூர்தி பழுதுபார்க்கும் பிரிவில், 19 மில்லியன் டொலரை முதலீடு செய்வதற்கும், ரஷ்யாவின் Rosoborone நிறுவனம் விருப்பம் வெளியிட்டுள்ளது.

எனினும், இந்தளவு தொகையை முதலீடு செய்வது மற்றும் வவுனியாவில் உலங்குவானூர்திகளை பழுதுபார்க்கும் பிரிவை நிறுவுவது என்பன பயனற்றது என்றும், இதனால் இந்த திட்டம் நிறுத்தப்பட்டதாகவும் முன்னாள் விமானப்படை தளபதி, கூறியிருந்தார்.

40 மில்லியன் டொலர் செலவில் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்றும் அந்த நிறுவனம் கூறியிருந்தது.

எனினும், இதில் பெரிய முதலீடு இருந்த போதிலும், சிறிலங்காவில் அமைக்கப்படும் இந்த பழுதுபார்க்கும் மையத்திற்கு மற்ற நாடுகள் தங்கள் உலங்குவானூர்திகளை அனுப்புவதற்கு வாய்ப்பில்லை  என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற உலங்குவானூர்தி பழுதுபார்க்கும் மையங்கள், தற்போது இந்தியாவிலும், வியட்னாமிலும், இயங்குகின்றன. அவற்றில் பணிகளை மேற்கொள்வதற்கு பெரும் கேள்வியும் உள்ளது.

இந்த ரஷ்ய நிறுவனமே சிறிலங்கா கடற்படைக்கு 190 மில்லியன் டொலர் பெறுமதியான போர்க்கப்பல் ஒன்றை விற்கவும் முற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *