மேலும்

சிறிலங்கா, இந்தியாவுக்கு ஐஎஸ் அமைப்பினால் அச்சுறுத்தல் – புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை

சிரியா மற்றும் ஈராக்கில் தமது பகுதிகளை இழந்ததை தொடர்ந்து இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் மீது ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கவனம் திரும்பியுள்ளதால், இந்தியா, சிறிலங்கா ஆகிய நாடுகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக் கூடும் என்று இந்திய புலனாய்வு அறிக்கைகள் எச்சரித்துள்ளன.

இந்தியாவின் என்டிரிவி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இதற்கான சாத்தியங்கள் தொடர்பாக, கேரள காவல்துறைக்கு மூன்று கடிதங்கள் இந்திய அரச புலனாய்வுப் பிரிவினால் அனுப்பப்பட்டுள்ளன.

ஈராக் மற்றும் சிரியாவில் நிலப்பரப்பை இழந்த பின்னர்,  தமது நாடுகளுக்குத் திரும்பி, வன்முறை வடிவிலான ஜிஹாத்தை முன்னெடுக்குமாறு ஐ.எஸ் தமது செயற்பாட்டாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளதாக அந்தக் கடிதங்களில் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் மற்றொரு புலனாய்வுத் தகவல் தொடர்பான அறிக்கையில், கொச்சியில் உள்ள முக்கியமான வணிக வளாகம் உள்ளிட்ட முக்கியமான இடங்களை ஐஎஸ் அமைப்பு இலக்கு வைக்கக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

நாட்டில் ஐஎஸ் தொடர்பான இணைய செயற்பாடுகள் அதிகரித்திருப்பது பயங்கரவாத தாக்குதல்களுக்கான அறிகுறிகளாக இருக்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, காஷ்மீர் ஆகிய மாநிலங்களோ ஐஎஸ் செல்வாக்கு அதிகமுள்ள மாநிலங்கள் என மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளில் கேரளாவில் இருந்து குறைந்தது 100 பேர் ஐஎஸ் அமைப்பில் இணைந்து கொண்டனர் என்று நம்பப்படுவதாக, மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அங்கு 21 ஆலோசனை மையங்களின் மூலம், 3000 பேர் வரை தீவிரமயமாக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது கண்காணிக்கப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள், வடக்கு கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

பாதுகாப்பை பலப்படுத்துமாறு உள்நாட்டு பாதுகாப்பு அமைப்புகளிடம் மாவட்ட காவல்துறை தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சிறிலங்காவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதை அடுத்து, கேரளாவில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 30 பேர் வரை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிறிலங்காவில் இருந்து ஐஎஸ் தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுப்பதற்காக கேரள கரையோரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *