மேலும்

சிறிலங்காவில் ரஷ்ய பாதுகாப்பு உயர் அதிகாரிகள் குழு – ஒத்துழைப்பை வலுப்படுத்த முயற்சி

ரஷ்யாவின் உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு பாதுகாப்பு உயர் மட்டங்களுடன் பேச்சுக்களை நடத்தி வருகிறது.

இந்தக் குழுவில், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளான மேஜர் ஜெனரல் அலெக்சாண்டர் சின்சென்கோ கேணல் சேர்ஜி உர்சென்கோ, லெப்.கேணல் றோமன் போப்ரஸ், விக்டர் பெட்ரோவ், றோமன் செபுர்னொவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களுடன் ரஷ்ய தூதுவர் யூரி பொறிசோவிச் மற்றும் ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரும் சிறிலங்கா அரச உயர்மட்டங்களுடனான  பேச்சுக்களில் கலந்து கொண்டுள்ளனர்.

இவர்கள் நேற்று பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர்.

அதன் பின்னர், சிறிலங்கா இராணுவத் தலைமையகத்துக்கு சென்றிருந்த ரஷ்ய குழுவினர் சிறிலங்கா இராணுவத் தளபதியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

இதன்போது, சிறிலங்கா படையினரிடம் உள்ள ரஷ்ய தயாரிப்பு ஆயுத தளபாடங்களை பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்துக் கொடுப்பதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்க இந்தக் குழு முன்வந்துள்ளது,

குறிப்பாக, சிறிலங்காவின் கவசப்படைப்பிரிவு மற்றும் இயந்திர காலாட்படைப்பிரிவு, மின்னியல் மற்றும் இயந்திரப் பொறியியல் படைப்பிரிவுகளில் உள்ள  கவசவாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களைப் பழுது பார்த்தல் மற்றும், புதுப்பித்துக் கொடுப்பது குறித்து இந்தப் பேச்சுக்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், ரஷ்யாவில் நடக்கின்ற பயிற்சிகளில் சிறிலங்கா படையினர் பங்கேற்கவும் இந்தக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்தப் பேச்சுக்களின் போது, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யா அளித்த பங்களிப்புக்கு சிறிலங்கா இராணுவத் தளபதி நன்றியைத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *