மேலும்

சிறிலங்கா படையினரை தண்டிப்பதால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது – ஜெனரல் ரத்நாயக்க

சிறிலங்கா படையினரைத் தண்டிப்பதன் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது,  அவ்வாறு செய்வதன் மூலம்  நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சித்தால், அது வெற்றி பெறாது, என்றும் சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

“போரின் போது, ஆயுதப்படையினர் செய்த தியாகங்கள் புறக்கணிக்கப்படுவது வருத்தமளிக்கிறது.சட்டத்தை மீறியவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

போரின் போது, பொதுமக்களை வேண்டுமென்றே இலக்கு வைக்க வேண்டும் என்ற நோக்கம் அரசாங்கத்துக்கு இருக்கவில்லை.

ஜெனிவா தீர்மானத்துக்கு காரணமான வெளிநாட்டு சக்திகளைத் திருப்திப்படுத்துவதற்காக இராணுவத்தை பலிக்கடா ஆக்கக் கூடாது.

அரசாங்கத்தின் மூலோபாயம், ஆயுதப்படையினரைப் பலவீனப்படுத்தும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில், இதுவரை 8  இராணுவ அதிகாரிகளும், 25 படையினரும், 7 கடற்படை அதிகாரிகளும், 10 படையினரும், கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 7 படையினர் இன்னமும் சிறைகளில் உள்ளனர்.

குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட படையினர் நீண்ட காலத்துக்கு தடுத்து வைக்கப்படக் கூடாது. அவர்கள் மீதான விசாரணைகளை இழுத்தடிக்காமல், துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

படையினரைத் தண்டிக்கவோ, சிறையில் அடைக்கவோ கூடாது என்று கேட்பது எமது நோக்கம் அல்ல. ஆனால் படையினரின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும்.

அப்பாவி மக்கள், அமைச்சர்கள், பிரமுகர்கள் பலரைக் கொன்ற , மதவழிபாட்டு இடங்களை அழித்த தீவிரவாதிகளுக்கு அரசாங்கம் பொது மன்னிப்பு அளித்துள்ளது. உலகின் மிக மோசமான பயங்கரவாத அமைப்பின் 12,000 உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், 30 ஆண்டு காலப் போரை பாரிய தியாகங்களின் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்த சிறிலங்கா இராணுவத்தினர் மோசமாக நடத்தப்படுகின்றனர்.

1983ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக, ஒழுங்கீனமாக நடந்து கொண்ட 69 இராணுவ அதிகாரிகளுக்கு, தண்டனையை வழங்கப்பட்டது.

நியாயமற்ற செயல்களைச் செய்த படையினரைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இராணுவத்தினரின் கௌரவத்தை பாதிக்காமல் தண்டிப்பதற்குப் பொருத்தமான முறை இருக்க வேண்டும்.

போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவரான முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவை கைது செய்வதற்கு இப்போது, சூழ்ச்சி செய்யப்படுகிறது.

முப்படைகளையும் சேர்ந்த பல உயர் அதிகாரிகள், கைது செய்யப்பட்டனர். சிலர் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக முறையான குற்றச்சாட்டுகளை  அவர்களால் முன்வைக்க முடியவில்லை.

போர்க்காலத்தில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு, முன்னைய அரசாங்கம் தவறியிருக்கலாம்.

எனினும், அவ்வாறு குறைபாடுகள் இருந்தால், அத்தகைய பொறுப்புக்கூறல் விவகாரங்களை தீர்க்க வேண்டிய பொறுப்பு தற்போதைய அரசாங்கத்துக்கே உள்ளது.” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் றொஷான் குணதிலகவும், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் திசார சமரசிங்கவும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *