காசோலை மோசடி – மேல் மாகாணசபை உறுப்பினர் சண்.குகவரதன் கைது
காசோலை மோசடி குற்றச்சாட்டில், மேல் மாகாணசபை உறுப்பினர் சண்.குகவரதன் குற்ற விசாரணைத் திணைக்கள காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்ற விசாரணைத் திணைக்களத்தின், வணிக குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே இவர் கைது செய்யப்பட்டார்.
மூன்று வீட்டு வளாகங்களைக் கொள்வனவு செய்வதற்காக, 70 மில்லியன் ரூபாவுக்கான செல்லுபடியற்ற காசோலையை வழங்கினார் என்று வணிகர் ஒருவர், செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல் மாகாணசபையின் உறுப்பினரான, சண்.குகவரதன், கட்டுமான வணிகத்திலும் ஈடுபட்டு வந்தார்.
நேற்று கைது செய்யப்பட்ட இவர் இன்று கல்கிசை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.