மேலும்

வன்னியில் கொட்டிய பெருமழை – கிளிநொச்சி கிராமங்கள் வெள்ளக்காடு

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கொட்டிய கடும் மழையினால், குளங்கள் நிரம்பி, வெள்ளநீர் பெருக்கெடுத்துப் பாய்கிறது. இதனால், பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னிப் பகுதிகளில் நேற்றிரவு கடும் மழை கொட்டியது. குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவானதால், கிளிநொச்சி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகள் திடீரென வெள்ளத்தில் மூழ்கின.

அதேவேளை 36 அடி கொள்ளளவு கொண்ட இரணைமடுக் குளம் ஏற்கனவே நிரம்பியிருந்த நிலையில் திடீர் பெருமழையினால், அதிகளவு நீர் குளத்தில் சேர்ந்தது.

இன்று காலை நிலவரப்படி, இரணைமடுக் குளத்தின் நீர் சுமார் 40 அடியை எட்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், குளத்தின் அணைகளை மேவி நீர் பாய்வதுடன், அனைத்து வான்கதவுகளும் திறந்து விடப்பட்டு நீர் வெளியேற்றப்படுகிறது.

ஆனாலும், குளத்தில் இருந்து வெளியேறும் நீரின் அளவை விட குளத்துக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரணைமடுக் குளத்தில் இருந்து பெருக்கெடுத்துப் பாயும் வெள்ளத்தினால், கிளிநொச்சி, பரந்தன் பகுதிகளில் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் மக்களை பாதுகாப்பாக இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, வெள்ளத்தில் சூழ்ந்த கிராமங்களில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பாக படகுகளில் மீட்கும் பணிகளில் சிறிலங்கா இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்திலும் குமுழமுனை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்றிரவு கொட்டிய மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வன்னியில் பெரும்பாலான குளங்கள் நிரம்பி நீர் வான்பாய்ந்து கொண்டிருப்பதால், வெள்ளி நிலை மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல இடங்களில் வீதிகளை மேவி வெள்ளம் பாய்ந்து கொண்டிருப்பதால், போக்குவரத்தும் துண்டிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *