தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை – சிறிலங்கா இராணுவத் தளபதி
வடக்கில் செயற்படுவதாக கூறப்படும் ஆவா குழுவினால், தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று சிறிலங்கா இராணுவத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
”தேசிய பாதுகாப்புக்கு எந்த வகையான ஆபத்து ஏற்பட்டாலும் அதனைச் சமாளிப்பதற்கான வசதிகளுடன் சிறிலங்கா இராணுவம் உள்ளது.
இராணுவ இயந்திரம் பலமாக உள்ளது. புலனாய்வு வலையமைப்பு முழுமையாகச் செயற்படுகிறது.
எனவே, ஆவா குழுவிடம் இருந்தோ, அல்லது வேறெந்த குழுவிடம் இருந்தோ அச்சுறுத்தல் ஏற்படும் சாத்தியங்கள் இல்லை.
பொதுமக்களுக்கு தவறான கருத்தை ஏற்படுத்தும் வகையில், வடக்கிலுள்ள மக்களின் காணிகள் திரும்ப ஒப்படைக்கப்படுவது தொடர்பாக சமூக ஊடகங்களில், பொய்யான செய்திகள் வெளியிடப்படுகின்றன.
வடக்கில் சிறிலங்கா இராணுவம் சில காணிகளை கைப்பற்றி வைத்திருந்தாலும், அவை முன்னர் பொதுமக்களுக்குச் சொந்தமானவையாக இருந்தன.
எனவே, அந்தக் காணிகளை அவர்களுக்கு விடுவிக்க இராணுவம் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கும்.