மேலும்

நாளை காலை பதவியேற்கிறது புதிய அமைச்சரவை

சிறிலங்காவின் புதிய அமைச்சரவை நாளை காலை 8.30 மணியளவில், சிறிலங்கா அதிபர் செயலகத்தில் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவையில் இடம்பெறும் 28 அமைச்சர்கள் நாளை காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சராக மங்கள சமரவீரவும்,  சக்தி, மின்சக்தி அமைச்சராக ரவி கருணாநாயக்கவும், சுகாதார அமைச்சராக ராஜித சேனாரத்னவும், பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சராக சம்பிக்க ரணவக்கவும் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டம் ஒழுங்கு அமைச்சராக மீண்டும் ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது,

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சராக நியமிக்கும் யோசனையை சிறிலங்கா அதிபர் நிராகரித்து விட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, புதிய அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என்று, மலிக் சமரவிக்ரம நேற்று அறிவித்திருந்தார். அவருடன் ஏனைய தேசியப் பட்டியல் உறுப்பினர்களான திலக் மாரப்பன, டி.எம்.சுவாமிநாதன் ஆகியோரும் அமைச்சர்களாக நியமிக்கப்படமாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

மொத்தம் 30 பேர் கொண்ட அமைச்சரவையையே நியமிக்க முடியும் என்பதால், ஐதேகவின்  முக்கிய உறுப்பினர்களான ஏரான் விக்கிரமரத்ன, ஹர்ஷ டி சில்வா, அஜித் பெரேரா போன்றவர்களுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படாது என்றும் கூறப்படுகிறது.

தேவைப்பட்டால் அமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்க தயாராக இருப்பதாக மனோ கணேசனும் றிசாத் பதியுதீனும் முன்வந்த போதும், சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களான,- அரசியல் நெருக்கடியில் பக்க பலமாக இருந்த அவர்களுக்கு, அமைச்சரவையில் இடமளிக்கப்பட வேண்டும் என்று ஐதேக மூத்த தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நாளை காலை புதிய அமைச்சரவையை சிறிலங்கா அதிபர் நியமிக்கவுள்ளார் என்று, அவருடன் இன்று நடத்திய சந்திப்புக்குப் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே உறுதிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *