மேலும்

இராஜதந்திர நிகழ்வுகளில் பிரதமர், அமைச்சர்களுக்குப் பதிலாக வெளிவிவகாரச் செயலர்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்குப் பதிலாக, வெளிநாட்டுத் தூதரகங்களின் நிகழ்வுகளில், வெளிவிவகாரச் செயலரே, சிறிலங்கா அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்து வருகிறார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவினால், பிரதமராக மகிந்த ராஜபக்ச செயற்பட முடியாத நிலையும், அமைச்சர்கள் பணியாற்ற முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

எனினும், மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்த அன்று, கொழும்பில் ஷங்ரி லா விடுதியில் நடந்த ஐக்கிய அரபு எமிரேட்சின் 47 ஆவது  தேசிய நாள் நிகழ்வுகளில், அந்த நாட்டின் தூதுவரின் அழைப்பின் பேரில் மகிந்த ராஜபக்ச கலந்து கொண்டிருந்தார்.

எனினும், ஷங்ரிலா விடுதியில் கடந்த புதன்கிழமை நடந்த, தாய்லாந்து தேசிய நாள் நிகழ்விலும், வியாழக்கிழமை ஜப்பானிய தூதுவர் அகிரா சுகியாமாவின் இல்லத்தில் நடந்த வரவேற்பு நிகழ்விலும், வெளிவிவகாரச் செயலர் ரவிநாத ஆரியசிங்கவே சிறிலங்கா அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்தார்.

ஜப்பானிய சக்தரவர்த்தி அகிஹிட்டோவின் 85 ஆவது பிறந்த நாள், கொழும்பில் உள்ள தூதுவரின் இல்லத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் சபாநாயகர் கரு ஜெயசூரிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

இராஜதந்திர நிகழ்வுகளில், பிரதம விருந்தினராக அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களே அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்வது வழக்கம்.

மேன்முறையீட்டு நீதிமன்றம், பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அமைச்சர்கள் பங்கேற்க வேண்டிய நிகழ்வுகளில் செயலர்களை பங்கேற்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *