மேலும்

புதிய பிரதமராக சமல் அல்லது நிமல் – சிறிலங்கா அதிபர் ஆலோசனை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த,  சமல் ராஜபக்ச அல்லது நிமல் சிறிபால டி சில்வாவை, கூடிய விரைவில் பிரதமராக நியமிப்பது குறித்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன,  ஆலோசித்து வருவதாக, அதிபர் செயலக வட்டாரங்களை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவையே  நியமிக்க வேண்டும் என்று, ஐக்கிய தேசிய முன்னணி,  உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதால், சமல் ராஜபக்ச,  அல்லது நிமல் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிப்பது குறித்து சிறிலங்கா அதிபர்,  ஆலோசித்து வருகிறார் என கூறப்படுகிறது.

அடுத்த கட்டம்

அதேவேளை,  சட்ட ஆலோசனைகளுக்கு பின்னரே சிறிலங்கா அதிபர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிப்பார் என்று, நேற்றிரவு மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம ஜயந்த  தெரிவித்திருந்தார்.

நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை அடுத்து,  சிறிலங்காவில் தற்போது பிரதமரோ அமைச்சர்களும் பதவியில் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

மீண்டும் மகிந்த?- தவறான முடிவு

மகிந்த ராஜபக்சவை சிறிலங்கா அதிபர் மீண்டும் இன்று காலை பிரதமராக நியமிக்க வாய்ப்பு உள்ளதாக நேற்றிரவு, அரசியல், ஊடக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும்,  அவ்வாறான முடிவு   சிறிலங்கா அதிபரால் எடுக்கப்பட்டால், அது நீதிமன்ற அவமதிப்பாக அமைவதுடன்,  ஒரு தவறை சரி செய்வதற்காக, பெரிய தவறை இழைத்த நிலைக்கு அவர் தள்ளப்படுவார் என்று  சட்ட நிபுணர் கோமின் தயாசிறி தெரிவித்தார்.

மகிந்தவை நியமிக்க முடியாது

மகிந்த ராஜபக்சவை மீண்டும் இன்று  பிரதமராக நியமிக்க முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

“தற்போதைய நிலையில், சிறிலங்கா அதிபருக்கு இரண்டு தெரிவுகள் உள்ளன.  

புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிப்பது முதலாவது தெரிவு.

பிரதமர் மற்றும் அமைச்சரவை இல்லாமல்,  தனியாக நாட்டை ஆட்சி செய்வது இரண்டாவது பிரிவு.

மகிந்த ராஜபக்சவை மீண்டும்  பிரதமராக நியமிக்க முடியாது,  ஆனால் முன்னர் அமைச்சர்களாக இருந்தவர்களில்  ஒருவரை, பிரதமராக நியமிக்க தடையில்லை” என்றும் அவர் தெரி்வித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *