மேலும்

மைத்திரியின் பிடிவாதத்தினால் பேச்சுக்கள் தோல்வி

நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தாலும் கூட ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பிடிவாதமாக தெரிவித்து விட்டதால், அவருடன் நேற்றிரவு ஐக்கிய தேசிய முன்னணி நடத்திய பேச்சுக்கள் தோல்வியில் முடிந்தன.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கும் இடையில் நேற்றிரவு சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தன.

இதன்போது, ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்குமாறு ஐக்கிய தேசிய முன்னணி வலியுறுத்தியது.

எனினும், அதற்கு சிறிலங்கா அதிபர் இணக்கம் தெரிவிக்கவில்லை. இதனால் இந்தப் பேச்சுக்கள் தோல்வியில் முடிந்தன.

மீண்டும் சந்திக்கப் போவதில்லை

பேச்சுக்கள் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல,“ இந்தப் பேச்சு தோல்வியில் முடிந்துள்ளது. சிறிலங்கா அதிபரை நாங்கள் மீண்டும் சந்திக்கப் போவதில்லை. அவருடன் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை.

தான் விரும்பும் ஒருவரையே பிரதமராக நியமிக்க முடியும் என்றும், அவ்வாறான ஒருவருடனேயே தன்னால் பணியாற்ற முடியும் என்றும் சிறிலங்கா அதிபர் கூறினார்.

அதற்கு நான், பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு அவ்வாறான ஒரு விதிமுறை அரசியலமைப்பில் இல்லை என்றும், எனவே இவ்வாறு நிபந்தனை விதிக்க முடியாது என்று கூறினேன்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெரும்பான்மை பலம் இருந்தாலும், அவர் அதற்கு ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்.அவரைப் பிரதமராக நியமிக்க  தான் விரும்பவில்லை என்று கூறினார்.

ஒக்ரோபர் 26ஆம் நாளுக்கு முந்திய அரசாங்கத்தை  மீண்டும் பதவிக்குக் கொண்டு வர அவர் விரும்பினாலும், ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் நியமிக்கமாட்டேன் என்று கூறினா்.

அவர், உச்சநீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் இடைக்கால உத்தரவுகளின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதை விரும்பாமல் இருக்கலாம் என்றும், இந்த இடைக்கால உத்தரவுகள் மாற்றமடையாமல் இருக்கலாம் என்பதால், அவர் இறுதி தீர்ப்பு வரை காத்திருக்க விரும்பக் கூடும்” என்று தெரிவித்தார்.

225 பேர் ஆதரித்தாலும் ரணிலுக்கு இடமில்லை

அதேவேளை இந்தப் பேச்சுக்கள் தோல்வியில் முடிந்ததாக தெரிவித்த ஐதேக பொதுச்செயலர் அகில விராஜ் காரியவசம், 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்தாலும் கூட ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் கூறியதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *