மேலும்

அட்மிரல் ரவீந்திர  இன்றும் சிஐடி விசாரணையில் இருந்து நழுவல்

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன  இன்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில்11   இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான  விசாரணைக்காக பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை  இன்று முற்பகல் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், இன்று அவர் விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை.  ஏற்கனவே செப்டெம்பர் மாதம் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைக்காக அழைத்திருந்த போதும் அவர் திடீரென மெக்சிகோவுக்கு புறப்பட்டு சென்றிருந்தார்.

குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை அழைப்பை பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன புறக்கணித்திருப்பது இது இரண்டாவது தடவையாகும்.

கொழும்பில்11   இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகநபரான நேவி சம்பத் என அழைக்கப்படும் லெப்டினன்ட் கொமாண்டர் பிரசாத் ஹெட்டியாராச்சியை,  மறைத்து வைத்து வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல உதவினர் என்று அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அதேவேளை,  தான் எந்த தவறையும் செய்யவில்லை என்றும் முழு உண்மைகளையும் நீதிமன்றத்தில் தெரிவிக்க தயாராக இருப்பதாகவும் கொழும்பு ஊடகம் ஒன்றிடம்  அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *