மேலும்

வீசியது மிளகாய் தூள் அல்லவாம் – நாடாளுமன்றக் கூத்துகள்

நாடாளுமன்றத்துக்குள் நேற்று நடந்த குழப்பங்களின் போது, காவல்துறையினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மீது வீசப்பட்டது மிளகாய்த் தூள் அல்ல, அது மென்பானங்களின் கலவையே என்று கூறியிருக்கிறார் சிறிலங்காவின் அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க.

நேற்றுப் பிற்பகல் நாடாளுமன்றத்தில் நடந்த குழப்பங்களின் போது, காவல்துறையினரின் முகத்திலும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் முகத்திலும் மிளகாய்த் தூள் கலந்த நீர் ஊற்றப்பட்டது.

குவளைகளில் தண்ணீர்

நேற்றுமுன்தினம் நடந்த அமர்வில், தண்ணீர் போத்தல்களை சபாநாயகரின் மீது வீசியதால், நேற்று சபைக்குள் தண்ணீர் போத்தல்கள் அனுமதிக்கப்படவில்லை. பிளாஸ்டிக் குவளைகளிலேயே தண்ணீர் வழங்கப்பட்டது.

பிடிபட்டார் பிரசன்ன

குடிப்பதற்காக வழங்கப்பட்ட தண்ணீர் குவளையில், மிளகாய்த் தூளைக் கலந்து, காவல்துறையினரின் முகத்திலும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் மீதும், மகிந்த ராஜபக்ச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர வீசியிருந்தார்.

நாடாளுமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட ஒளிப்பதிவுகளில் இது தெளிவாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

வாசலை அடைத்த பிரசன்ன ரணவீர

சபாநாயகர் வழக்கமாக வரும், வாசலில் கதவை அடைத்தபடி காத்து நின்றார் பிரசன்ன ரணவீர. சபாநாயகர் மாற்று வழியில் காவல்துறையினரின் பாதுகாப்புடன் உள்ளே வந்ததும் அவர் ஆவேசமடைந்து தாக்குதலில் இறங்கினார்.

நாற்காலியை உடைத்து வீசிய ஜோன்ஸ்டன்

சபாநாயகருக்கான மாற்று ஆசனத்துடன் முதலாவது பொலிஸ் அதிகாரி சபைக்குள் நுழைந்தார். அவரிடம் இருந்து அந்த நாற்காலியை விமல் வீரவன்ச பறித்தெடுத்தார். அதனை ஜோன்ஸ்டன் பெர்னான்டோ இழுத்து உடைத்தார்.

அந்த நாற்காலியை ஜோன்ஸ்டன் பெர்னான்டோ சபாநாயகரை நோக்கி வீசினார். அதன் உடைந்த பாகங்கள், காவல்துறையினர் மீது தாக்கின.

கேடயமாகிய ஆசன பஞ்சணைகள்

ஆளும் கட்சியினர் கையில் கிடைத்த ஆவணங்கள், புத்தகங்களை தூக்கி சபாநாயகரை நோக்கி வீசிய போது, ஆசனங்களின் சொகுசுப் பஞ்சணைகளை கேடயமாக பயன்படுத்தியே காவல்துறையினர் அவற்றைத் தடுத்தனர்.

தடிப்பான நூல்களும் பறந்தன

சபாநாயகரின் மேசைக்குக் கீழ் இருந்த அரசியலமைப்பு மற்றும் தடித்த சட்ட நூல்களை எடுத்து சபாநாயகரை நோக்கி வீசி எறிவதில் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, மகிந்தானந்த அளுத்கமகே, விமல் வீரவன்ச  போன்றவர்கள் ஈடுபட்டனர்.

அவ்வாறு எறியப்பட்ட நூல்களை ஐதேக எம்.பி ஹரின் பெர்னான்டோவின் கையில் கிடைத்த போது அவரும் பதிலுக்கு ஆளும்கட்சியினரை நோக்கி வீசினார்.

அக்கிராசனத்தை தூக்கிய வாசு

சபாநாயகர் காவல்துறையினரின் பாதுகாப்புடன் உள்ளே வருவதை அவதானித்த பிரசன்ன ரணவீர, ஆனந்த அளுத்கமகே உள்ளிட்டவர்கள், சபாநாயகரின் அக்கிராசனத்தை தூக்கிக் கொண்டு சென்றனர். அந்த ஆசனத்தை அபகரிக்கும் செயலில் வாசுதேவ நாணயக்காரவும் பங்கெடுத்துக் கொண்டார்.

காவல்துறை அதிகாரிக்கும் அறை

பிரசன்ன ரணவீர நேற்று சபாநாயகருக்குப் பாதுகாப்பு அளிக்க வந்த காவல்துறையினரின் மீதும், தாக்குதல் நடத்தியிருந்தார். அவர், காவல்துறை அதிகாரி ஒருவரின் கன்னத்தில் அறையும் காட்சியும் ஒளிப்பதிவாகியுள்ளது.

பிரசன்ன ரணவீர நேற்று முன்தினம் ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான தயா கமகே, நவீன் திசநாயக்க போன்றவர்களையும் தாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிளகாய்த் தூளினால் வந்த சிக்கல்

காவல்துறையினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மீது மிளகாய்த் தூள் வீசப்பட்டது. இதில் ஐதேக உறுப்பினர்கள் காமினி ஜெயவிக்ரம பெரேரா, மலிக் சமரவிக்ரம மற்றும் ஜேவிபி உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோர் நாடாளுமன்ற மருந்தகத்தில் சிகிச்சை பெற்றிருந்தனர்.

இந்த விவகாரம் மகிந்த அணியினருக்கு கடும் எதிர்ப்பைத் தோற்றுவித்துள்ளது.

எஸ்.பி.திசநாயக்கவின் நகைச்சுவை

இதையடுத்து, வீசப்பட்டது மிளகாய் தூள் அல்ல என்றும், கொகோ கோலா மற்றும் லெமன் மென்பானங்களின் கலவையே வீசப்பட்டது என்றும் எஸ்.பி.திசநாயக்க நியாயப்படுத்தியிருக்கிறார்.

பாலிதவும் கத்தியும்

அதேவேளை, நேற்றுமுன்தினம் நடந்த நாடாளுமன்ற அமர்வின் போது நடந்த கைகலப்பில், ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும, கத்திபோன்ற கூரிய பொருள் ஒன்றை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.இதுதொடர்பான ஒளிப்படங்களும் வெளியாகின.

இதையடுத்து, நேற்று நாடாளுமன்ற அமர்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சிறப்பு அதிரடிப்படையினரால் உடல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டே சபைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

 கத்தியா? கருவியா?

எனினும், பாலித தெவரப்பெருமவிடம் இருந்தது, குத்துவதற்குப் பயன்படக் கூடிய கத்தி அல்ல, சாப்பாட்டு மேசையில் வெண்ணெய் பூசுவதற்குப் பயன்படுத்தப்படும் கத்தியே என்று ஐதேகவின் உறுப்பினர்கள் கூறியிருந்தனர்.

ஆனால், பாலித தெவரப்பெரும இதுபற்றிக் கருத்து வெளியிடுகையில், தான் கத்தியைக் கொண்டு செல்லவில்லை என்றும், தனது கையில் இருந்தது, கடிதங்களைத் திறக்கப் பயன்படுத்தப்படும், உலோகப் பொருளே என்றும் தெரிவித்துள்ளார்.

அதனைத் தான் சபாநாயகரின் மேசையில் இருந்து எடுத்ததாகவும், அவர் கூறியுள்ளார்.

பைபிளை வீசவில்லையாம்

நேற்றைய குழப்பங்களின் போது, சபாநாயகரின் மேசையில் இருந்த நூல்களை தூக்கி வீசியிருந்தார் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ. அவர் பைபிளைத் தூக்கி வீசியதாக எதிர்க்கட்சியினர் கூறியிருந்தனர்.

ஆனால் தான் அவ்வாறு பைபிளைத் தூக்கி வீசவில்லை என்றும் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ இன்று மறுப்புத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *