மேலும்

வடக்கில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி?

நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யும் முயற்சிகள் இடம்பெற்று வரும் நிலையில், வடக்கில் தமிழ் அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளில் முழுவீச்சில் இறங்கியுள்ளன.

உச்சநீதிமன்றத்தில் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐதேக, ஜேவிபி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளன.

இந்த மனுவின் மீது உத்தரவுகள் ஏதும் பிறப்பிக்கப்படும் வரை- சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அரசிதழ் அறிவிப்புக்கு அமைய நாடாளுமன்றத் தேர்தலை ஜனவரி 05ஆம் நாள் நடத்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும்  சூழலே காணப்படும்.

வரும் 19ஆம் நாள் வேட்புமனுத்தாக்கல் ஆரம்பிக்கவுள்ளது. அதற்கு இன்னும் ஒரு வார காலஅவகாசமே உள்ளது. வேட்புமனுத் தாக்கல் ஆரம்பித்து, ஒரு வாரத்தில், வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கால எல்லை முடிந்து விடும்.

நொவம்பர் 26ஆம் நாள் நண்பகலுக்கு முன்னர் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால்,- இன்னமும் இரண்டு வாரங்களுக்குள் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் தெரிவு, கூட்டணிகள், ஆசனப் பங்கீடுகள் குறித்து முடிவெடுக்க வேண்டிய நிலை அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், வடக்கில் தமிழ் அரசியல் கட்சிகள் பலரும் தேர்தலுக்கான முன்னாயத்தப் பணிகளை ஆரம்பித்துள்ளன.

தனிவழியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

யாழ்ப்பாணத்தில் நேற்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமது உள்ளூராட்சி உறுப்பினர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகளுடன் இதுபற்றிக் கூடி ஆராய்ந்தது.

இதன்போது, தமது கட்சி தனித்தே போட்டியிடும் என்றும், முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியில் இணைந்து போட்டியிடாது என்றும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணியில், புளொட், ஈபிஆர்எல்எவ் போன்ற கட்சிகள் இருப்பதால், தாம் அதில் இணைந்து போட்டியிட முடியாது என்றும், தனித்தே வேட்பாளர்களை நிறுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில், கஜேந்திரகுமார், கஜேந்திரன், மணிவண்ணன் உள்ளிட்டவர்கள் போட்டியிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் மக்கள் கூட்டணி இன்று ஆலோசனை

அதேவேளை, வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி இன்று யாழ்ப்பாணத்தில் கூடி – தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆராயவுள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணி இன்னமும் ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாத நிலையில் சுயேட்சைக் குழுவாகவே போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பலமான கூட்டணி ஒன்றை அமைக்கும் திட்டத்துடன், முதலமைச்சர் விக்னேஸ்வரன் இருந்தாலும், ஈபிஆர்எல்எவ் கட்சியும், புதிதாக தொடங்கப்பட்ட ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் போன்றனவே அதில் இணைந்து கொள்ள முன்வந்துள்ளன.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முன்வருமாறு முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனுக்கு அவரது கட்சிக்குள் அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்ற போதும், அவர் இன்னமும் அதற்கு இணங்கவில்லை எனத் தெரிகிறது.

அதேவேளை, சுரேஸ் பிரேமச்சந்திரன், அனந்தி சசிதரன், ஐங்கரநேசன், அருந்தவபாலன் உள்ளிட்ட சிலர் யாழ் மாவட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர்களாக களமிறங்கும் ஆர்வத்தில் உள்ளனர்.

மும்முனைப் போட்டி?

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வது உள்ளிட்ட தேர்தல் பணிகளை வெளிப்படையாக ஆரம்பிக்கவில்லை.

இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுவுக்குப் பின்னர், கூட்டமைப்பும் தேர்தல் பணிகளில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், வடக்கில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கிடையில் மும்முனைப் போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *