மேலும்

மகிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் புதிதாக  நியமிக்கப்பட்ட பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, ஐக்கிய தேசியக் கட்சி இன்று நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளித்துள்ளது.

நாடாளுமன்ற அவைத் தலைவர் என்ற முறையில் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் தாம் கையெழுத்திட்டு, சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளதாக, லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

“அரசியலமைப்பின் 46 (1) மற்றும் 48 ஆகிய பிரிவுகளின் அடிப்படையில், பதவியில் உள்ள பிரதமர்  இறந்து போனால், பதவி விலகினால், நாடாளுமன்ற  உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால்,  அல்லது, அரசாங்க கொள்கை அறிக்கை. அல்லது  வரவுசெலவுத் திட்டம், தோற்கடிக்கப்பட்டால்,  அல்லது அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தோற்கடிக்கப்பட்டால்  மாத்திரமே, பிரதமர்  பதவி வெற்றிடமாகும்.

அண்மையில் நியமிக்கப்பட்ட பிரதமர் மீது அவ்வாறு நம்பிக்கையில்லை” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மகிந்த பிரதமராக்கப்பட்டதற்கு 118 எம்.பிக்கள் எதிர்ப்பு

இதற்கிடையே சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று காலை ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜேவிபி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில், மேற்படி கட்சிகளின், 118 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இவர்கள், மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு்ம், அதற்குப் பின்னரான நியமனங்களுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் தீர்மானத்தில் ஒப்பமிட்டு, சபாநாயகரிடம் அதனைக் கையளித்தனர்.

மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக நியமித்து, ஒக்ரோபர் 26ஆம் நாள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட அரசிதழ் அரசியலமைப்புக்கு விரோதமானது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா முன்மொழிந்த இந்த தீர்மானத்தை சம்பிக்க ரணவக்க வழிமொழிந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *