மேலும்

மைத்திரி – மகிந்த கூட்டுக்கு எதிராகப் பலம் காட்டியது ஐதேக

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்தும், மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த, சிறிலங்கா அதிபருக்கு எதிராகவும், நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டக் கோரியும், கொழும்பில் ஐதேக இன்று பாரிய பேரணியை நடத்தி வருகிறது.

கொழும்பு லிபேர்ட்டி சுற்றுவட்டத்தில் ஆரம்பித்த இந்தப் பேரணியில், பல்லாயிரக்கணக்காக ஐதேக ஆதரவாளர்களும், அதன் கூட்டணிக் கட்சி ஆதரவாளர்களும் பங்கேற்றுள்ளனர்.

ஐதேக மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய, ஹரின் பெர்னான்டோ, மைத்திரிபால சிறிசேனவை அதிபராக்கியமைக்காக ஐதேக ஆதரவாளர்களிடம் மன்னிப்புக் கோரியதுடன் அவரை வீட்டுக்கு அனுப்பப் போவதாகவும் கூறினார்.

மைத்திரிபால சிறிசேனவுக்கு பாடம் கற்பிப்பது ஐதேகவுக்குக் கடினமான வேலையல்ல என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

போலி அரசாங்கம் தொடர்ந்தால், அனைத்துலக சமூகத்தின் பொருளாதார தடை மற்றும் ஏனைய தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரித்தார்.

ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றிய போது, நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை சிறிலங்கா அதிபர் சிறிசேன, அபகரிப்பதற்குத் தான் அனுமதிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அரசாங்க கட்டடங்களுக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதற்கும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதை தடைவிதித்தும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றத் தடை உத்தரவை சிறிலங்கா காவல்துறை பெற்றிருந்தது.

அத்துடன், சிறிலங்கா காவல்துறையினர் 2000 பேரும், சிறப்பு அதிரடிப்படையின் 10 அணிகளும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில், நீர்ப்பீரங்கி வாகனங்களும், ஆயத்தமாக நிறுத்தப்பட்டிருந்தன.

எனினும், எதிர்பார்க்கப்பட்டதை விட பெரும் தொகையான ஐதேக ஆதரவாளர்கள் இந்தப் பேரணியில் திரண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த பேரணியினால், அமெரிக்க தூதரகம், மற்றும் அமெரிக்க மையம் என்பன மூடப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *