மேலும்

அரசியலமைப்பு ரீதியாக நானே பிரதமர் – மைத்திரிக்கு ரணில் கடிதம்

அரசியலமைப்பு ரீதியாக தாமே சிறிலங்காவின் பிரதமராக இருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, ரணில் விக்கிரமசிங்க நேற்று இரவு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து, நீக்கியுள்ளதாக, சிறிலங்கா அதிபர், நேற்றிரவு கடிதம் அனுப்பியதை அடுத்தே, இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதில்,“ சிறிலங்கா அரசியலமைப்பின் படி நியமிக்கப்பட்ட பிரதமர் நானே என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். தொடர்ந்தும் பதவியில் இருக்கிறேன். அரசியலமைப்பின் (42)4 பிரிவின் கீழ், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைக் கொண்டிருக்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்று அதில் ஒப்பமிடப்பட்டுள்ளது.

அதேவேளை, நேற்றிரவு அலரி மாளிகையில் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடந்திய ஆலோசனைக்குப் பின்னர், கருத்து வெளியிட்டிருந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,

“நான் தான் சிறிலங்காவின் பிரதமராக இருக்கிறேன். எனக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ளது. நான் தொடர்ந்தும் பிரதமராகப் பணியாற்றுவேன். அரசியலமைப்பின் படி வேறு யாரையும் பிரதமராக நியமிக்க முடியாது.

இப்போது எல்லாம் நாடாளுமன்றத்தின் கையில் தான் உள்ளது. நாடாளுமன்றம் தான் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும். நான் நம்பிக்கையில்லா பிரேரணையைத் தோற்கடித்திருந்தேன்.

அவர்கள் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்து பெரும்பான்மை பலத்தை நிரூபித்திருக்க வேண்டும். மக்கள் ஒரு ஆணையை வழங்கியுள்ளனர். நாம் கலந்துரையாடி அடுத்த கட்டம் குறித்து முடிவு செய்வோம்.

கூட்டு அரசாங்கத்தில், ஐக்கிய தேசிய முன்னணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பன இடம்பெற்றிருந்தன. இப்போது ஒரு கட்சி தான் வெளியேறியிருக்கிறது.

அரசியலில் இது போன்ற எதற்கு எப்போதும் தயாராகத் தான் இருக்க வேண்டும். எவருடனும் இணைந்து பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன்.

ஆட்சியை நடத்த எமக்கு 2015இல் அளிக்கப்பட்ட மக்கள் ஆணை இன்னமும் இருக்கிறது. ராஜபக்சவின் நியமனத்தினால், எந்த உறுதியற்ற நிலையும் தோன்றிவிடவில்லை.“ என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *