மேலும்

கொழும்பு கொள்கலன் முனையம் இந்தியாவுக்குக் கிடையாது – சிறிலங்கா அதிபர் விடாப்பிடி

கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவுக்கு விட்டுக் கொடுப்பதில்லை என்பதில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விடாப்பிடியான நிலைப்பாட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் சிறிலங்கா அதிபரின் இந்த நிலைப்பாட்டை, சிறிலங்காவின் துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க, தெளிவுபடுத்தினார்.

“கொழும்பு கிழக்கு கொள்கலன் இறங்குதுறையை, சிறிலங்கா துறைமுக அதிகார சபையே வைத்திருக்கும்.

கடந்த ஆண்டு, இந்திய வெளிவிவாகார அமைச்சர் சுஸ்மா சுவராஜூக்கும், சிறிலங்காவின் அனைத்துலக வணிக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட  பொருளாதார ஒத்துழைப்புக் குறித்த புரிந்துணர்வு உடன்பாட்டில், கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவின் ஒத்துழைப்புடன் அபிவிருத்தி செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

பொதுவாக கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்தை  கூட்டாக அபிவிருத்தி செய்வது என்றே கூறப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை இந்தியா தாராளமாக அபிவிருத்தி செய்யலாம்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது அண்மைய புதுடெல்லி பயணத்தின் போது, சிறிலங்கா அதிபரின் இந்த நிலைப்பாட்டை, இந்தியப் பிரதமருக்கு தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதுடெல்லியில் இருந்து நாடு திரும்பிய பின்னர், அமைச்சரவைப் பத்திரத்தின் மீது முடிவெடுப்பதை ஒருவாரம் பிற்போடுமாறு, கோரினார்.

இந்த விடயம் தொடர்பாக இந்தியத் தூதுவரை சிறிலங்கா பிரதமர் சந்திக்க வேண்டியிருக்கிறது.  இந்தியத் தூதுவரிடம் எமது நிலைப்பாட்டை தெரியப்படுத்துவோம்.

இந்தியாவின் உதவியுடன், மேற்கொள்ளப்படும் திட்டங்களில் தாமதம் குறித்து இந்தியப் பிரதமர் கவலை வெளியிட்டுள்ள நிலையில், இந்தத் திட்டங்களைத் துரிதப்படுத்தும், நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அமைச்சர்களே முன்னெடுக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *