மேலும்

சீனக்குடா எண்ணெய் தாங்கிகள் இந்தியாவுக்கு – தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு

திருகோணமலை – சீனக்குடாவில் உள்ள 16 எண்ணெய்க் தாங்கிகளை இந்தியாவின் லங்கா ஐஓசி நிறுவனத்துடன் இணைந்து அபிவிருத்தி செய்யும் சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக பெற்றோலிய பணியாளர் தொழிற்சங்கங்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

சீனக்குடாவில் பிரித்தானியர் காலத்தில் அமைக்கப்பட்ட, 99 எண்ணெய்க் தாங்கிகளில் 15 தாங்கிகள் ஏற்கனவே இந்தியாவின் லங்கா ஐஓசி நிறுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.

ஏனையவற்றில் 16 எண்ணெய் தாங்கிகளை லங்கா ஐஓசி நிறுவத்துடன் இணைந்து சிறிலங்காவின் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்கு சிறிலங்கா அமைச்சரவை கடந்தவாரம்  அங்கீகாரம் அளித்துள்ளது.

இந்த நிலையில், சிறிலங்காவின் பெற்றோலிய பணியாளர் தொழிற்சங்கங்கள் இந்தத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.

16 எண்ணெய் தாங்கிகளையும் பயன்படுத்த முடியும் என்று பரிந்துரை செய்யப்பட்ட போதிலும், அதனை இந்திய நிறுவனத்துக்கு வழங்க சிறிலங்கா அரசாங்கம் முற்படுவதாக, தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

கொலன்னாவவில் உள்ள தாங்கிகளுடன் ஒப்பிடுகையில், திருகோணமலை- மட்டக்களப்பு வீதியில் உள்ள 16 எண்ணெய் தாங்கிகளும் நல்ல நிலையில் இருப்பதாகவும், இதனை, அனுபவம் வாய்ந்த தகுதியான பொறியாளர்கள் ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர் என்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

“மூன்று மாதங்களுக்குத் தேவையான எண்ணெயை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்ற போதிலும், இரண்டு வாரங்களுக்கான எரிபொருளே இப்போது இருப்பில் வைக்கப்படுகிறது.

மூன்று மாத எண்ணெய் இருப்பை வைத்திருப்பதற்கு எண்ணெய்த் தாங்கிகள் இல்லை. மூன்று மாத கையிருப்பை வைத்திருப்பதற்கு இன்னும் 83 தாங்கிகள் தேவைப்படுகின்றன.

இரண்டு வார கையிருப்பு போதுமானதல்ல. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டால், பொதுமக்கள் பாரிய பிரச்சினையை எதிர்கொள்வார்கள்.” என்று சிறிலங்கா பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கங்களின் செயலர் ராஜகருண தெரிவித்தார்.

அதேவேளை, சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு எதிரான போராட்டத்தில் குதிக்கவும் தொழிற்சங்கங்கள் தயாராகி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *