மேலும்

ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்

1977ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சியை வென்றிருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாள் நினைவுகூரல் தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“மகாத்மா காந்தி ஆரம்பித்த உண்மை மற்றும் ஒத்துழையாமையை அடிப்படையாகக் கொண்ட சத்தியாக்கிரக போராட்டத்தை பாடமாக எடுத்துக் கொண்டு, 1977ஆம் ஆண்டில்,  தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அகிம்சைப் போராட்டத்தை  முன்னெடுத்திருந்தால், சிறிலங்காவில் ஆயுதப் போராட்டத்தை தடுத்திருக்கலாம்.

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக 1977இல் அவர்கள் வன்முறையற்ற போராட்டத்தில் ஈடுபடாமல் போனது மிகப் பெரிய தவறு.

அப்போது நாடாளுமன்றத்தில் தமிழ் அரசியல் பிரதிநிதித்துவம் வலுவாக இருந்தது. வடக்கு கிழக்கில் இருந்து பெருமளவு தமிழ் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

1977 ஆம் ஆண்டை நான் அடிக்கடி நினைத்துக் கொள்வேன். அப்போது, ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐதேக அரசாங்கம் பதவியில் இருந்தது.

அப்போது, காந்தி கற்றுக் கொடுத்த, சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை, போன்ற அகிம்சை வழியில் செயற்பட்டிருந்தால்,  இந்த நாட்டில் ஒரு ஆயுதப் போராட்டத்தை நாம் தடுத்திருக்க முடியும்.

நாம் அதை செய்திருந்தால், வன்முறை இன்றி எமது பிரதேசங்களில் சுயாட்சியை வென்றிருக்க முடியும்.

இந்த நாட்டில் மீண்டும் ஒரு வன்முறை ஏற்படாது என்பது எனது நம்பிக்கை.

சிறிலங்கா அரசாங்கம்  தேசியப் பிரச்சினைக்கு சரியான தொரு தீர்வை வழங்கும் கடமையை நிறைவேற்றத் தவறினாலும் கூட, தமிழ் மக்கள் மகாத்மா காந்தியின் போதனைகளின் அடிப்படையில், வன்முறையின்றி தமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்” என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

3 கருத்துகள் “ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்”

 1. மனோ says:

  பழையதை மறந்து போய்அறளை பேர்ந்த பேச்சு பேசுகிறார். மற்ற எல்லாருக்கும் அறளை நோய் என்று நினைக்கிறாரோ ?

 2. Elias Jeyarajah says:

  என்னமாய்த் திரித்துச் செய்தி பண்ணுகிறீர்கள்!
  திரு சம்பந்தன் சொன்னதாக நீங்களே பிரசுரித்தமை 3 ம் பந்தியிலிருந்து தான் ஆரம்பமாகிறது. அதில் எந்த இடத்திலும் நீங்கள் திரித்த தலைப்பில் உள்ளவாறு [ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்] என அவர் சொல்லவில்லை. 77 இல் அன்றைய தமிழ்த்தலைமை (அமிர்தலிங்கம் தலைமையிலான அவரது தமிழர் விடுதலைக் கூட்டணி) அகிம்சைவழிப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தால் ஆயுதப் போராட்டத்துக்குத் தேவை ஏற்பட்டிருக்காது என்றவாறு சொல்கிறாரே அன்றி ஆயதப் போராட்டம் இல்லாவிட்டால் சுயாட்சி கிடைத்திருக்கும் என்று எங்கு சொல்லியிருக்கிறார்???

 3. VELUPPILLAI THANGAVELU says:

  நாய்க்கு எங்கே கல் பட்டாலும் காலைத்தான் தூக்குமாம். அது போல சம்பந்தர் எதைப் பேசினாலும் அதனைத் திரித்து வெயிடுவதை சிலர் வாடிக்கையாக வைத்துக் கொண்டுள்ளார்கள்.
  புதினப்பலகை செய்திக்குக் கொடுத்திருக்கும் தலைப்புக்கும் செய்திக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
  வன்முறையிலான ஆயுதப் போராட்டம் தவறு என்று குறை கூறி சம்பந்தன் உரையாற்றவில்லை. மாறாக, தாங்களே (கூட்டமைப்பினரே) இந்த நிலைமைக்கும் அழிவுகளுக்கும் காரணம் என்று தனைத் தானே குற்ற நிலைக்கு உட்படுத்தி ஆற்றிய உரை அது.
  தமிழ் மக்கள் 1977 இல் மிகப் பெரிய- அபாரமான- நினைத்துப் பார்க்க முடியாத – ஒரு பெரு வெற்றியைத் தேடித் தந்தார்கள். அந்த வலிமையே யோடு தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை சட்ட மறுப்பு இயக்கம் போன்ற முனைப்பான அறவழிப் போராட்டப் பாதையில் தாமதிக்காமல் தமிழர் விடுதலைக் கூட்டணி முன்னெடுத்திருக்க வேண்டும். அஹிம்சை வழியில் தீவிரமாகப் போராடும் மார்க்கத்தை ஆரம்பிக்காமல் மிதவாதிகளாகச் செயற்பட்டு, காலத்தை இழுத்தடித்தமையே ஆயுதப் போராட்டம் தீவிரமடையக் காரணமாயிற்று- என்பதுதான் சம்பந்தனின் விளக்கம்.
  தங்கள் பொறுப்பையும், மக்களின் தீர்மானத்தையும் தமிழர் விடுதலைக் கூட்டணி தெளிவாகப் புரிந்து கொண்டு, கனகாத்திரமாகச் செயற்பட்டிருந்தால் ஆயுதம் ஏந்திப் போராடும் மாற்று வழிக்குத் தமிழ் இளைஞர்கள்
  தள்ளப்பட்டிருக்கமாட்டார்கள் என்பதையே சம்பந்தன் குறிப்பிட்டார்.
  இப்படி சம்பந்தன் குற்றப் பொறுப்பைத் தானும் சேர்ந்து ஒப்புக் கொண்டு, வெளிப்படுத்தியமையைப் பாராட்டிய சுமந்திரன் கீழிறங்கி இப்படிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டமைக்காக அவரைத் தமது உரையில் மெச்
  சினார் என்பது குறிப்பிடத்தக்கது.
  தாங்கள் (தமிழர் விடுதலைக் கூட்டணியினர்) அப்போது பொறுப்புணர்ந்து, செயற்பட்டிருந்தால் இன்று ஆயுதப் போராட்டமும் அழிவுகளும் இவ்வளவு தீவிரமடைந்திருக்காது என்று பொறுப்புடன் சம்பந்தன் அந்தப் பதிலை வழங்கியிருப்பாராயின் அத்தகைய குற்ற ஒப்புதலை வன்முறையிலான ஆயுதப் போராட்டம் தவறு என்று குறை கூறி சம்பந்தன் உரையாற்றவில்லை. மாறாக, தாங்களே (கூட்டமைப்பினரே) இந்த நிலைமைக்கும் அழிவுகளுக்கும் காரணம் என்று தனைத் தானே குற்ற நிலைக்கு உட்படுத்தி ஆற்றிய உரை அது.
  போர்க்காலத்தில் புலிகள் பிடிக்க வந்தார்கள் தப்பி ஓடிவந்துவிட்டேன் என்று பொய் சொல்லி கனடிய குடியுரிமை பெற்றவர்கள் அந்த மண்ணில் மக்களோடு மக்களாக நின்று கொண்டு எமது மக்களின் மேம்பாட்டுக்கு பாடுபட்டு வருபவர்களை வசை பாடுகிறார்கள். நாக்கில் நரம்பின்றி ஒருமையில் திட்டுகிறார்கள்.
  சம்பந்தர் மீதும் ததேகூ மீதும் சேறு பூச வேண்டும் என்று ஒரு சிலர் நாயாய் பேயாய் அலைகிறார்கள். ஒட்டாவைச் சேர்ந்த ஒருவர் சம்பந்தனை பேதை (idiot) என வருணித்து எழுதியுள்ளார்.
  இது வசை பாடுகிறவரின் குடிப்பிறப்பு, வளர்ப்பு இரண்டையும் காட்டுகிறது.
  உயர்குடிப்பிறப்பு, இழிபிறப்பு என்று வேறுபடுத்துவதற்கு உரைகல் ஒழுக்கமுடைமை அல்லது ஒழுக்கமின்மை என்கிறார் வள்ளுவர்.
  ஒழுக்க முடையவர்க்குத் தவறியும் தீய சொற்கள் பேச மாட்டார்கள், எழுத மாட்டார்கள். எழுதினால் அவரது குடிப்பிறப்பில் ஐயம் வரும்!
  சம்பந்தர் தன்னைப் பற்றியும் தான் சார்ந்த கட்சி பற்றியும் சுய விமரிசனம் (self – criticism) செய்திருக்கிறார். இது வரவேற்கப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *