மேலும்

அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்

சுமார் ஒரு மாதமாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ் அரசியல் கைதிகள் தமது போராட்டத்தை இன்று காலை தற்காலிகமாக கைவிட்டனர்.

அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 தமிழ் அரசியல் கைதிகள்- தம்மை விடுதலை செய்யக் கோரி, கடந்த செப்ரெம்பர் 14ஆம் நாள் தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.

இதையடுத்து, மகசின் சிறைச்சாலையிலும், அனுராதபுர சிறைச்சாலையிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள 55 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசமடைந்து வந்தது.

இந்த நிலையில், நேற்றுமுன்தினம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும், பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.

இதன்போது, எதிர்வரும் 17ஆம் நாள் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தீர்க்கமான முடிவு ஒன்றை அறிவிப்பதாக சிறிலங்கா அதிபர் மைத்திரபால சிறிசேன உறுதியளித்திருந்தார்.

இது குறித்து, நேற்றுக்காலை அனுராதபுர சிறைச்சாலைக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா மற்றும் சிவமோகன் ஆகியோர், அரசியல் கைதிகளிடம் எடுத்துக் கூறி, உண்ணாவிரதப் போராட்டத்தை இடைநிறுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து, அரசியல் கைதிகள் தமது போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளனர்.

அதேவேளை, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய, நேற்று அருட்தந்தை சக்திவேல் தலைமையிலான குழுவினர், அனுராதபுர சிறைச்சாலைக்குச் சென்று அரசியல் கைதிகளிடம் போராட்டத்தை இடைநிறுத்துமாறும், அவர்களின் சார்பில் தாம் போராட்டத்தை முன்னெடுப்பதாகவும் உறுதியளித்தனர்.

எனினும், அதற்கு முன்னதாகவே, அரசியல் கைதிகள் தமது போராட்டத்தை இடைநிறுத்தியிருப்பதாக அவர்களிடம் தெரிவித்தனர்.

சிறைச்சாலையில் முடிந்த நடை பயணம்

அதேவேளை, அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழத்தில் இருந்து மாணவர்கள் ஆரம்பித்த நடைபயணம், இன்று ஐந்தாவது நாள், அனுராதபுர சிறைச்சாலையில் முடிவடைந்தது.

நேற்று மாலை ரம்பேவ பகுதியில் நிறுத்தப்பட்ட நடைபயணம், இன்று காலை அனுராதபுர சிறைச்சாலை நோக்கி ஆரம்பிக்கப்பட்டது. மாணவர்கள், பொதுமக்கள், மற்றும் அரசியல் பிரமுகர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

அதையடுத்து, நடைபயணமாக வந்தவர்களில் 10 பேர், அரசியல் கைதிகளைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் மாணவர்கள் கோபமடைந்து காணப்பட்டனர்.

அதேவேளை, போராட்டம் முடிந்த பின்னர் சிறைச்சாலைக்கு முன்பாக நின்ற மாணவர்களிடம் வந்த, ஐந்து பேர் கொண்ட சிங்கள இளைஞர்களின் குழுவொன்று, தர்க்கத்தில் ஈடுபட்டனர். அரசியல் கைதிகள் எவருமில்லை, புலிகள் தான் சிறைக்குள் உள்ளனர் என்று அவர்கள், மாணவர்களுடன் முரண்பட முனைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *