மேலும்

அரசியல் கைதிகள் விடுதலையை வரவுசெலவுத் திட்டத்துக்கான ஆயுதமாக்குங்கள் – முதல்வர்

எதிர்வரும் வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது, அரசியல் கைதிகளின் விடுதலையை சிறிலங்கா அரசாங்கத்திடம் ஒரு நிபந்தனையாக முன்வைக்க வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நேற்று வடக்கு மாகாண முதல்வரின் செயலகத்தில், கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து கருத்து வெளியிட்ட வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,

“அரசியல் கைதிகளின் விடுதலையை, வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவளிப்பதற்கான ஒரு நிபந்தனையாக, சிறிலங்கா அரசாங்கத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்க வேண்டும் என்று கோருவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு வழக்குகளில் உதவுவதற்கான சட்டவாளர்கள் குழுவொன்றை அமைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

நீண்ட உண்ணாவிரதப் போராட்டங்களினால் அரசியல் கைதிகளின் உடல் நிலை பாதிக்கப்படும் என்பதைக் கருதியும், அவர்களின் போராட்டத்தை வெளியில் இருந்து நாம் முன்னெடுப்போம் என்ற உறுதிமொழியைக் கொடுத்தும், உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்துமாறு அரசியல் கைதிகளிடம், அருட்தந்தை சக்திவேல் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு அனுராதபுர சிறைச்சாலைக்குச் சென்று கோரிக்கை விடுப்பதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.

இதற்கிடையே அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட நடைபவனி, நேற்று வவுனியா, மதவாச்சி பகுதிகளைக் கடந்து சென்றது.

கொட்டும் மழைக்கு மத்தியில் மாணவர்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். இன்று இந்தப் பேரணி அனுராதபுர சிறைச்சாலையைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *