மேலும்

சிறிலங்காவின் தலைமை நீதியரசராகப் பொறுப்பேற்றார் நளின் பெரேரா

சிறிலங்கா உச்சநீதிமன்றத்தின் 46 ஆவது தலைமை நீதியரசராக, நளின் பெரேரா நேற்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

முன்னதாக, தலைமை நீதியரசர் பதவிக்கு நளின் பெரேராவின்  பெயரை சிறிலங்கா அதிபர் அரசியலமைப்பு சபைக்குப் பரிந்துரை செய்திருந்தார். நேற்று நண்பகல் கூடிய அரசியலமைப்பு சபை ஒருமனதாக அதனை அங்கீகரித்திருந்தது.

பத்தரமுல்லவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர், சிறிலங்காவின் நீதித்துறை வரலாற்றில்  முதல் முறையாக மிகவும் மூத்த, அனுபவம்மிக்க உச்சநீதிமன்ற நீதியரசர் ஒருவர் தலைமை நீதியசர் பதவிக்கு தாம் முன்மொழிந்திருப்பதாக கூறியிருந்தார்.

கடந்த காலங்களில் தலைமை நீதியரசர் பதவிக்கு மூப்பு அடிப்படையில் நியமனங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்றும், அரசியல், தனிப்பட்ட அல்லது கட்சி சார்ந்த அடிப்படையிலேயே நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சீஷெல்சில் இருந்து நாடு திரும்பிய பின்னர், தன்னைச் சந்தித்த உச்சநீதிமன்ற நீதியரசர்கள், மிகவும் தகுதியான, மூத்த நீதியரசர் ஒருவரை ததலைமை நீதியரசராக நியமிக்குமாறு கேட்டுக் கொண்டனர் என்றும் அவர் கூறினார்.

அவ்வாறு நியமிக்கப்படுவது தொழில்சார் நீதிபதிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தனர். அவ்வாறு சமர்ப்பிப்பட்ட நீதியரசர்களின் பட்டியலில், 38 ஆண்டுகள், 11 மாதங்கள் நீதித்துறையில் பணியாற்றியவரின் பெயரையே நான் தலைமை நீதியரசர் பதவிக்கு முன்மொழிந்துள்ளேன் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை, சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த நிகழ்வில் நளின் பெரேரா, தலைமை நீதியரசராக பொறுப்பேற்றார்.

1977ஆம் ஆண்டு நீதிச்சேவைக்குள் நுழைந்த நீதியரசர் நளின் பெரேரா, நீதிவானாக பணியாற்ற ஆரம்பித்து,  பின்னர் மாவட்ட நீதிவானாக, மேல் நீதிமன்ற நீதிபதியாக, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக, பணியாற்றியவர்.

2016ஆம் ஆண்டில் இருந்து உச்சநீதிமன்ற நீதியரசராக பணியாற்றிய வந்த நிலையிலேயே அவர் தலைமை நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *