மேலும்

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கிய மகிந்த – விசாரணைக்கு கோரிக்கை

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு, வழங்கப்பட்ட நிதி தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நெருக்கடிகளை எதிர்கொண்ட போது, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் இயன் பாய்ஸ்லி தனது குடும்பத்தினருடன் இரண்டு முறை சிறிலங்கா அரசாங்கத்தின் சலுகைகளைப் பெற்று கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

அவர் சிறிலங்கா அரசாங்கத்திடம் 1 இலட்சம் பவுண்டுகளைப் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர், அவர் 30  நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்க  தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரை சிறிலங்கா அரசாங்கம் விலைகொடுத்து வாங்கியுள்ளது என்ற குற்றச்சாட்டு தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில், இயன் பாய்ஸ்லி உள்ளிட்ட ஐந்து பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நிதி கொடுத்துள்ளமை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நேற்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, “மற்றொரு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரும் மகிந்த அரசிடம் நிதி பெற்றிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.அவர் இரண்டு மாதங்களில் ஒன்பது தடவைகள் சிறிலங்காவுக்கு வந்துள்ளார்.

இதுபோன்று முன்னைய அரசாங்கம் 5 பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி வழங்கியுள்ளது. பாய்ஸ்லி நிதி பெற்றதை ஒப்புக் கொண்டிருக்கிறார். அவர்  1 இலட்சம் பவுண்டுகளைப் பெற்றதாக சில அறிக்கைகள் கூறுகின்றன” என்று தெரிவித்தார்.

அதேவேளை, இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேராவும் அவருடன் இணைந்து கொண்டு இதுகுறித்து உடனடியாக விசாரணை செய்யப்பட வேண்டும் என்றும், இந்த நிதி யாரால்- எப்படி வழங்கப்பட்டது என்பதை கண்டறிய வேண்டும் என்றும் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து வெளிவிவகார அமைச்சு விசாரணை நடத்த வேண்டும் என்று, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வேண்டுகோள் விடுத்தார்.

பிரித்தானியாவுக்கான முன்னாள் தூதுவர் கிறிஸ் நொனிஸ் மற்றும் வெளிவிவகார அமைச்சராக இருந்த பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரினார்.

ஒரு கருத்து “பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கிய மகிந்த – விசாரணைக்கு கோரிக்கை”

  1. மனா‌ே says:

    இன்னுமா இலங்‌க‌ை ஒரு ஏ‌ழ‌ைநாடு என்ப‌த‌ை நம்பச் ச‌ொல்றீங்களா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *