மேலும்

ராஜபக்ச குடும்பத்துக்கு வெளியில் இருந்து அதிபர் வேட்பாளர் – பசில் சூசகம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் கூட்டு எதிரணியின் தரப்பில் ராஜபக்ச குடும்பத்துக்கு வெளியே உள்ளவர்களை வேட்பாளராக நிறுத்துவது குறித்தும் பரிசீலிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார், சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில், அதிபர் தேர்தலில் எதிரணியின் வேட்பாளர் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கே அவர் இந்தப் பதிலை அளித்திருக்கிறார்.

“அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பாக மகிந்த ராஜபக்ச அவசரப்பட்டு முடிவெடுப்பார் என்று நான் நினைக்கவில்லை. தேர்தலுக்கு இன்னும் 450 நாட்கள் வரை உள்ளன.

இந்தளவுக்கு முன்கூட்டியே வேட்பாளர் பற்றி நாம் முடிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன்.

முன்னர், பொதுமக்கள் மற்றும் அமைப்புகளுடன் அதிகம் கலந்துரையாடியே முடிவு எடுக்கப்பட்டது.

அதிபர் வேட்பாளர் தொடர்பாக, முடிவெடுக்க பல கட்சிகள், அமைப்புகளுடன் கலந்துரையாடும் முறையான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது.

நடைமுறைகளின்படி, மகிந்த ராஜபக்ச இதனை சரியான நேரத்தில் மேற்கொள்வார்.

கேள்வி – வேட்பாளராக உங்களின் பெயர், கோத்தாபய ராஜபக்ச மற்றும் சமல் ராஜபக்சவின் பெயர்களும் அடிபடுகின்றனவே. உங்களுக்கு அதிபர் கனவு இருக்கிறதா?

பதில் – என்னிடம் அத்தகைய கனவு இல்லை. பலரும் பல்வேறு கருத்துக்களை வெளியிடுகிறார்கள். அது அவர்களின் சுதந்திரம்.தகுதியான பலர் இருக்கிறார்கள் என்பதையும் இது காட்டுகிறது.

நீங்கள் குறிப்பிட்ட பெயர்களைத் தவிர வேறு பல பெயர்களும் உலாவுகின்றன. அவர்களில் ராஜபக்ச குடும்பத்தைச் சேராதவர்களும் உள்ளனர்.

கேள்வி – ராஜபக்ச குடும்பத்துக்கு வெளியில் உள்ளவர்கள் யார்?

பதில் –  அதனை நான் வெளிப்படையாக கூற விரும்பவில்லை. அதிபர் வேட்பாளர்கள் குறித்து பேசுவதை நிறுத்திக் கொள்கிறேன்.அதுபற்றி மகிந்த ராஜபக்சவே முடிவு செய்வார்.

அனைவருடனும் கலந்துரையாடி இறுதியான முடிவை எடுக்கும் எடுக்கும் உரிமை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கேள்வி – அதிபர் வேட்பாளருக்கான தகைமைகள் குறித்த உங்களின் கருத்து என்ன?

பதில் – மீண்டும் சொல்கிறேன், அதனை மகிந்த ராஜபக்ச கவனித்துக் கொள்வார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *