மேலும்

வடக்கு மாகாண சபையைக் கலைக்க முயற்சி – சிறப்பு அமர்வில் சந்தேகம்

மேன்முறையீட்டு நீதிமன்றில் வடக்கு மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் தொடர்ந்த வழக்கில் அளிக்கப்பட்ட இடைக்காலத் தீர்ப்பை அடுத்து எழுந்துள்ள சூழ்நிலைகள் தொடர்பாக- வட மாகாண சபையின்  சிறப்பு அமர்வில் இன்று விவாதம் நடத்தப்பட்டது.

வடக்கு மாகாண அமைச்சர் பதவியில் இருந்து தம்மை முதலமைச்சர் விக்னேஸ்வரன் நீக்கியது செல்லுபடியற்றது என்று உத்தரவிடக் கோரி, டெனீஸ்வரன் தாக்கல் செய்த மனு மீது, கடந்த மாதம் 29 ஆம் நாள் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தது.

முதலமைச்சரின் உத்தரவு செல்லாது என்றும், டெனீஸ்வரன் தொடர்ந்து  அமைச்சராக இருக்கிறார் என்றும், அந்த இடைக்கால உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

எனினும், டெனீஸ்வரனை அமைச்சராகச் செயற்படுவதற்கு, முதலமைச்சர் விக்னேஸ்வரன் இடமளிக்கவில்லை. மீண்டும் கடந்த 9ஆம் நாள், மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவை நீடித்திருந்தது.

அப்போது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றில் முறையீடு செய்திருப்பதாக, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் முறையிட்டிருப்பதை சுட்டிக்காட்டி, முதலமைச்சர் டெனீஸ்வரனை அமைச்சராகச் செயற்பட இடமளிக்காமல் தடுத்து வருகிறார்.

இந்த நிலையில், வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களாக எத்தனை பேர் உள்ளனர் என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

இந்தச் சூழ்நிலைகள் குறித்து ஆராய, இன்று வடக்கு மாகாண சபையின் சிறப்பு அமர்வு கூட்டப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை. உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்படும் நிலையில் இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்துவது பொருத்தமற்றது என்று அவர், ஏற்கனவே கடந்த அமர்வில் கூறியிருந்தார்.

அத்துடன், இன்றைய அமர்வில் புளொட் உறுப்பினர்கள் எவரும் பங்கேற்கவில்லை. அமர்வில் பங்கேற்ற ரெலோ உறுப்பினர்களும், தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி விட்டு அவையில் இருந்து வெளியேறினர்.

தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்கள், சிலர் முதலமைச்சரின் நிலைப்பாட்டைக் கண்டித்துக் கருத்து வெளியிட்டனர்.

இந்த நிலையில், இன்றைய அமர்வின் முடிவில் கருத்து வெளியிட்ட, வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்,  வடக்கு மாகாண சபையில் தற்போது ஏற்பட்டுள்ள அமைச்சரவை தொடர்பான பிரச்சினை, சபையை கலைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளா  என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்தார்.

“மாகாணசபை சார்ந்து அமைச்சரவை செயற்பாட்டில் இருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது. அவ்வாறு அமைச்சரவை செயற்பட்டால் அதனை கூட்ட வேண்டிய பொறுப்பு பிரதம செயலாளருக்கு உள்ளது.

இவ்வாறான நிலையில் அவ்வாறு கூட்டுகின்ற நிலமை பிரதம செயலாளருக்கு தற்போது இல்லை என்றே கருதுகின்றேன்.

ஏனெனில், இந்த விடயத்தில், நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் முதலமைச்சர் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையாக பார்க்கின்ற போது அத்தகைய முழுமையான அமைச்சரவை இல்லை என்றே தெரிகின்றது.

1977ஆம் ஆண்டு மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தின் 27ஆம் இலக்க பிரிவு 5 ஐ அமுலாக்கம் செய்யப்படும் அச்சம் இருக்கின்றது.

அதாவது மாகாண சபை அரசியலமைப்பில் இருந்து பிறழ்வாக செயற்பட்டால் அதனை நீக்கும் அதிகாரம் உள்ளது.

இது எங்கேயோ ஒர் கை, தெரிந்தோ தெரியாமலோ இச் சபையை இக் கட்டான நிலைக்கு தள்ளி அதனூடாக இச் சபையை கலைக்கின்ற நிலைக்கு கொண்டு வர முயற்சிக்கின்றனரா என்ற சந்தேகம் எழுகின்றது” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *