மேலும்

யாழ்.குடாநாட்டில் மேலும் 522 ஏக்கர் காணிகளை விடுவிக்கிறது சிறிலங்கா இராணுவம்

யாழ்.குடாநாட்டில் மேலும் 522 ஏக்கர் காணிகளை சிறிலங்கா இராணுவம் உரிமையாளர்களிடம் கையளிக்கவுள்ளதாக, மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றிடம் தகவல் வெளியிட்டுள்ளார்.

யாழ். குடாநாட்டில் இன்னமும், 3100 ஏக்கர் தனியார் காணிகள் மாத்திரம், சிறிலங்கா இராணுவத்தினரின் வசம் உள்ளதாகவும், ஏற்கனவே, 3800 ஏக்கர் காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும், சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

”தனியார் காணிகளில் அமைந்துள்ள சிறிலங்கா இராணுவ முகாம்களை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கு, 880 மில்லியன் ரூபாவை, புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சிடம் இராணுவம் கோரியிருந்தது.

முகாம்களை இடமாற்றம் செய்வதற்காக, கோரப்பட்ட நிதியில் ஒரு பகுதி புனர்வாழ்வு அமைச்சிடம் இருந்து கிடைத்துள்ளது.எஞ்சிய பகுதி நிதியும் விரைவில் கிடைத்து விடும்.

இதனால், கூடிய விரைவில், எஞ்சியுள்ள பெரும்பாலான காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்க முடியும்.

வலிகாமம் வடக்கில், தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காக சில காணிகள் இராணுவத்துக்குத் தேவைப்படுகிறது. இதில் விட்டுக்கொடுப்பு இருக்காது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, யாழ். மாவட்டத்தில் இன்னமும் 4000 ஏக்கர் காணிகள் சிறிலங்கா இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் கடந்தவாரம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *