மேலும்

இந்தியாவின் திட்டங்களை இந்த ஆண்டில் ஆரம்பிக்க சிறிலங்கா இணக்கம்

இந்தியாவின் உதவி மற்றும் முதலீட்டிலான  திட்டங்கள் இந்த ஆண்டில் ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு நேற்று பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய் கோகலே, அலரி மாளிகையில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது கீச்சகப் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அந்த பதிவிலேயே, இந்தியாவின் உதவி மற்றும் முதலீட்டிலான  திட்டங்கள் இந்த ஆண்டில் ஆரம்பிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

அதேவேளை,  நேற்றைய சந்திப்பின் போது, சிறிலங்காவில் இந்தியாவின் முதலீட்டை அதிகரிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான எட்கா உடன்பாடு மற்றும் வடக்கில் போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்காக இந்திய உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் வீடமைப்புத் திட்டங்கள், குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

வடக்கில் வீதி வலையமைப்புகளை புனரமைப்பதில் இந்தியா முதலீடு செய்வதற்கு இந்திய வெளிவிவகாரச் செயலர் விருப்பம் வெளியிட்டுள்ளார்.

சிறிலங்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் விடுதலை மற்றும், இந்திய அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் சுவசெரிய என அழைக்கப்படும் இலவச நோயாளர் காவுவண்டிச் சேவையை விரிவாக்குவது குறித்தும், இந்தச் சந்திப்பில் பேசப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *