மேலும்

சீனா, ரஷ்யாவுடனான உறவுகள் சீர்படுத்த முடியாதளவுக்கு சேதம் – என்கிறார் பீரிஸ்

ரஷ்யா மற்றும் சீனாவுடனான சிறிலங்காவின் உறவுகளை மைத்திரிபால – ரணில் அரசாங்கம் சீர்படுத்த முடியாதளவுக்கு சேதப்படுத்தியுள்ளது என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குற்றம்சாட்டியுள்ளார். பத்தரமுல்லவில் உள்ள தமது கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார்.

நாமல் ராஜபக்சவுடன் தொடர்புடைய ரஷ்யாவின் இரகசிய நடவடிக்கை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் அறிந்திருந்தது என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சரான மங்கள சமரவீர அண்மையில் கூறியிருந்தார்.

இதுகுறித்து எழுப்ப்ப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பீரிஸ் ‘அரசாங்கத்துக்கு எதிரான சிறப்பு பரப்புரை நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு நாமல் ராஜபக்சவுக்கு, ரஷ்யா உதவியதாக இப்போது, குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

2015 அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச்சுக்கு சீனா நிதி அளித்தது என்ற குற்றச்சாட்டுக்கும் ரஷ்யா மீதான குற்றச்சாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

ஐ.நா. பாதுகாப்புச் சபை உறுப்பு நாடுகளான சீனா மற்றும் ரஷ்யாவுடனான உறவுகளை சிறிலங்கா அரசாங்கம் சீர்குலைத்திருப்பதாக தோன்றுகிறது.

ஏனைய நாடுகள் பல்வேறு தீர்மானங்களை எமக்கு எதிராக கொண்டு வந்த போது, இந்த நாடுகள் எப்போதும் அனைத்துலக அரங்கில் சிறிலங்காவுடன் நின்றவை.

சீனாவும், ரஷ்யாவும் உள்நாட்டு அரசியலில் தலையீடு செய்யவில்லை. தற்போதைய குழப்பத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் தான் பொறுப்பு.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *