மேலும்

சிறிலங்கா பிரதமரின் உத்தரவை அடுத்து பதவி விலகினார் விஜயகலா

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவை அடுத்து, இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து, விஜயகலா மகேஸ்வரன் விலகியுள்ளார்.

நேற்றுமாலை அவர், தனது பதவி விலகல் கடிதத்தை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடந்த அரச நிகழ்வில், விடுதலைப் புலிகள் மீண்டும் வர வேண்டும் என்று உரையாற்றிய விஜயகலா மகேஸ்வரனை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆளும்கட்சி, எதிர்க்கட்சி வேறுபாடின்றி, சிங்கள அரசியல்வாதிகள் அழுத்தங்களைக் கொடுத்திருந்தனர்.

இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் இருந்து விஜயகலா மகேஸ்வரனை உடனடியாக கொழும்பு வருமாறு உத்தரவிட்டார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

இதையடுத்து. நேற்றுமுன்தினம் இரவு சிறிலங்கா பிரதமரை விஜயகலா மகேஸ்வரன் சந்தித்தார்.

இதன்போதே, இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகுமாறு விஜயகலா மகேஸ்வரனுக்கு ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, நேற்றுமாலை, சிறிலங்கா அதிபருக்கும், பிரதமருக்கும் தனது பதவி விலகல் கடிததங்களை விஜயகலா அனுப்பி வைத்துள்ளார்.

இவர் அமைச்சர் பதவியில் இருந்து விலகினாலும், அவருக்கு எதிரான விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.

இதற்கான குழு விரைவில் நியமிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது,

ஒரு கருத்து “சிறிலங்கா பிரதமரின் உத்தரவை அடுத்து பதவி விலகினார் விஜயகலா”

  1. Sivarajah Kanagasabai
    Sivarajah Kanagasabai says:

    வீரத் தமிழிச்சி! பலருக்கு இல்லாத வீரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *