மேலும்

வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து 5 பேர் இதுவரை கைது

ஒட்டுசுட்டானில் விடுதலைப் புலிகளின் வெடிபொருட்கள், சீருடைகள், கொடி என்பன முச்சக்கர வண்டி ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்ட போது கைப்பற்றப்பட்ட சம்பவத்தை அடுத்து, இதுவரையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும், பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டியில் இருந்து தப்பியோடிய செல்வலிங்கம் என்ற முன்னாள் போராளி, சிறப்பு அதிரடிப்படையினரின் உதவியுடன் கைது செய்யப்பட்டதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

இவர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாதவர் என்றும், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தீவிரமான உறுப்பினராக இருந்தவர் என்றும் காவல்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

முதலில் கைது செய்யப்பட்ட இருவரும், விடுதலைப் புலிகளின் தங்கம் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடம் தனக்குத் தெரியும் என்று செல்வலிங்கமே அழைத்துச் சென்றார் என்றும், அந்த  இடத்தை தோண்டிய போதே, வெடிபொருட்கள் கிடைத்தன என்று விசாரணைகளின் போது கூறியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் அவர்களின் அந்த வாக்குமூலங்களை தீவிரமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை என்றும் சிறிலங்கா காவல்துறையினர் கூறியுள்ளனர்.

அதேவேளை, கடைசியாக மாங்குளத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி பற்றிய பல்வேறு பெயர்கள் கூறப்படுகின்றன. ஏகாம்பரம், வெள்ளைச்சாமி, செல்வலிங்கம் என்று பல்வேறு பெயர்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே மேற்படி சம்பவத்தை அடுத்து, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தேடுதல்கள் நடத்தப்பட்டு வருவதுடன், பலர் விசாரணைகளுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *