பின்லாந்துடன் அரசியல் ஆலோசனை பொறிமுறையை உருவாக்கும் சிறிலங்கா
ஹெல்சின்கியில் நடந்த இரண்டாவது சுற்று இருதரப்பு கலந்துரையாடலின் போது, அரசியல் ஆலோசனை பொறிமுறையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டில், சிறிலங்காவும் பின்லாந்தும் கையெழுத்திட்டுள்ளன.
கடந்த பெப்ரவரி 25ஆம் நாள் இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு உடன்பாடு வழக்கமான அரசியல் உரையாடல் மற்றும் ஒத்துழைப்புக்கான ஒரு கட்டமைப்பை உருவாக்குவதுடன், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, தொழிற்கல்வி, கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கான இயக்கம் ஆகியன குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் குடும்பங்களுக்கான நுழைவிசைவு செயல்முறைகளை ஒழுங்குபடுத்த கொழும்பில் நுழைவிசைவு மையத்தை அமைப்பது குறித்து பரிசீலிக்குமாறு பின்லாந்தை சிறிலங்கா கேட்டுக் கொண்டது.
இந்தப் பேச்சுக்களில் ஈடுபட்ட சிறிலங்கா தூதுக்குழுவிற்கு சுகீஸ்வர குணரத்ன தலைமை தாங்கினார், பின்லாந்து தூதுக்குழுவிற்கு ஜாரி சிங்கரி தலைமை தாங்கினார்.
