மேலும்

தயான் ஜயதிலகவின் நியமனத்துக்கு 100இற்கு மேற்பட்ட சிவில் சமூகத்தினர் எதிர்ப்பு

ரஷ்யாவுக்கான தூதுவராக நியமிக்கப்படுவதற்குப் பெயரிடப்பட்டுள்ள கலாநிதி தயான் ஜயதிலகவுக்கு, 100இற்கும் மேற்பட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகளும், மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

நாட்டின் பெயரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு, இவரை ரஷ்யாவுக்கான தூதுவராக நியமிக்கும் முடிவை கைவிடுமாறு சிறிலங்கா அதிபரிடம் இவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

முன்னைய ஆட்சிக்காலத்தில் நீதிக்குப் புறம்பான படுகொலைகளை நியாயப்படுத்தும் வகையில் செயற்பட்ட தயான் ஜயதிலக, ரஷ்ய தூதுவராக நியமிக்கப்படுவதற்கு, நாடாளுமன்றத்தின் உயர் பதவிகளுக்கான குழுவிடம், 100 வரையிலான சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் கல்வியாளர்களும், 14 அமைப்புகளும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் தயான் ஜயதிலகவின் நியமனத்தை நிராகரிக்குமாறும் அவர்கள் கோரியுள்ளனர்.

புதிய அரசியலமைப்பை ஆதரிப்போர் கொல்லப்பட வேண்டும் என்று வலியுறுத்திய, கோத்தாபய ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட வியத்மக அமைப்பின் முக்கியமான ஒரு நபராக தயான் ஜயதிலக இருக்கிறார் என்பதையும் இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ரஷ்யாவுக்கான தூதுவராக தயான் ஜயதிலகவை நியமிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளார்.

எனினும், நாடாளுமன்ற உயர் பதவிகளுக்கான குழு இதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

இந்த நியமனத்துக்கு எதிர்ப்புகள் இருந்தால் தெரிவிக்குமாறு நாடாளுமன்ற உயர் பதவிகளுக்கான குழு கோரியிருந்த நிலையிலேயே, சிவில் சமூகத்தினர் அவருக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *