ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுவிக்க இந்திய குடியரசுத் தலைவர் மறுப்பு
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரை விடுவிக்க அனுமதி கோரிய தமிழ்நாடு அரசின் மனுவை இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.
முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரினதும், மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நிலையில், கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் அடைபட்டுள்ளனர்.
தமிழ் நாடு முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரையும், விடுதலை செய்ய முடிவு எடுத்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தொடர்ந்த வழக்கு அரசியலமைப்பு அமர்வு முன்பு நிலுவையில் உள்ளது. தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்ட்டனை விதிக்கப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி தமிழ்நாடு அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன. அதற்கு மத்திய அரசு பதில் அளிக்கவில்லை.

தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு சில மாதங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு அனுப்பிய கடிதத்தின் மீது மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து 7 பேரின் உடல்நிலை, குடும்ப சூழல், பொருளாதார பின்னணி குறித்த விவரங்களை கோரி தமிழ்நாடு அரசுக்கு இந்திய மத்திய அரசு அண்மையில் கடிதம் அனுப்பியது. இதற்கு தமிழ்நாடு அரசு உரிய பதில் அளித்தது.
இந்த தகவல்கள், வழக்கு விவரங்களை மத்திய உள்துறை அமைச்சு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைத்தது.
இதனை பரிசீலித்த குடியரசுத் தலைவர், ராஜிவ் கொலை வழக்கின் 7 குற்றவாளிகளையும் விடுதலை செய்ய முடியாது என்று கூறி தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நிராகரித்தார்.
ராஜிவ் கொலையாளிகள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் கருத்தோடு மத்திய அரசு ஒத்துப்போகவில்லை. மத்திய அரசின் பரிந்துரைபடியே முடிவு எடுக்கப்பட்டது என்று தமிழ்நாடு அரசுக்கு இந்திய குடியரசுத் தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.
