மேலும்

பட்டியல் எதுவும் இல்லை – சாலிய பீரிஸ் குத்துக்கரணம்

எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தால், போரின் இறுதிக்கட்டத்தில் காணாமல் போனவர்கள்  அல்லது, சிறிலங்கா படையினரிடம் சரணடைந்தவர்களின் விபரங்களை வெளியிட முடியும் என்று தாம் கூறவில்லை என்று, காணாமல் போனோருக்கான பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் கடந்த 2ஆம் நாள் நடந்த, காணாமல் போனோருக்கான பணியகத்தின் அமர்வின்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன் நடத்திய கலந்துரையாடலில்,  எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தால், போரின் இறுதிக்கட்டத்தில் காணாமல் போனவர்கள்  அல்லது, சிறிலங்கா படையினரிடம் சரணடைந்தவர்களின் விபரங்களை வெளியிட முடியும் என்று சாலிய பீரிஸ் கூறியிருந்தார் என செய்திகள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பாக காணாமல் போனோருக்கான பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தால், போரின் இறுதிக்கட்டத்தில் காணாமல் போனவர்கள்  அல்லது, சிறிலங்கா படையினரிடம் சரணடைந்தவர்களின் விபரங்களை வெளியிட முடியும் என்று காணாமல்  போனோர் பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் கூறியிருப்பதாக ஊடங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இது சரியானது அல்ல.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், காணாமல் போனோர் அல்லது சரணடைந்தோரின்  பட்டியல் காணாமல் போனோருக்கான பணியகத்தின் வசம் இருப்பதாக நான் கூறவில்லை.

அவ்வாறான எந்தப் பட்டியலும் காணாமல் போனோருக்கான பணியகத்திடம் இல்லை.

இந்த விடயத்தில் பொய்யான வாக்குறுதிகளை கொடுக்க முடியாது. விரைவில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்ற உறுதியை அளிக்க முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *