மேலும்

கீத் நொயார் கடத்தல் – மகிந்தவிடம் விரைவில் விசாரணை

‘தி நேசன்’ ஆங்கில நாளிதழின்  இணை ஆசிரியர் கீத் நொயார்  கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

2008 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் மிக விரைவில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர், சில விடயங்கள் தொடர்பாக மகிந்த ராஜபக்சவிடம் தெளிவுபடுத்திக் கொள்வதற்கு, விசாரணையாளர்கள் முடிவு செய்திருப்பதாக, மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கீத் நொயார் கடத்தப்பட்ட தகவலை உடனடியாக மகிந்த ராஜபக்சவுக்குத் தாமே தெரியப்படுத்தியதாகவும், அதன் மூலமே அவர் காப்பாற்றப்பட்டதாகவும் சபாநாயகர் கரு ஜெயசூரிய கூறியிருந்தார்.

இதுதொடர்பாக வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்கு மகிந்த ராஜபக்சவிடம், சிறிலங்கா காவல்துறையினர் வசதியான நாள் ஒன்றைத் தருமாறு கோரியுள்ளனர்.

கீத் நொயார் கடத்தல் தொடர்பாக, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, முன்னாள் தேசிய புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண, உள்ளிட்டோரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

அத்துடன் முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர இன்னமும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *