மேலும்

பிரதி சபாநாயகர் பதவிக்கு மும்முனைப் போட்டி? – இன்று இரகசிய வாக்கெடுப்பு

பிரதி சபாநாயகரைத் தெரிவு செய்வதற்கு இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. நாடாளுமன்ற படைக்கல சேவிதர் அனில் பராக்கிரம சமரசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்று பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளது, இதற்குத் தேவையான வாக்குப்பெட்டிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும், ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் இராமநாதனை முன்னிறுத்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி முடிவு செய்துள்ளது.

மொனராகல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறியை போட்டியில் நிறுத்த ஐதேக  தீர்மானித்துள்ளது.

அதேவேளை, கூட்டு எதிரணி, நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சினி பெர்னான்டோ புள்ளேயை முன்னிறுத்த திட்டமிட்டுள்ளது.

இதனால், இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் சூழல் காணப்படுகிறது.

இன்று பிற்பகல் 1 மணியளவில் நாடாளுமன்றம் கூடவுள்ளது. முதலாவதாக, வாய்மூல கேள்வி நேரத்துக்குப் பின்னர், பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெறும்.

முதலாவது இரகசிய வாக்கெடுப்பு

சபாநாயகரைத் தெரிவு செய்வதற்கான முதலாவது இரகசிய வாக்கெடுப்பு, 2014ஆம் ஆண்டு நடைபெற்றது.

அப்போது டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டாரவும், டியூ குணசேகரவும் சபாநாயகர் பதவிக்கு முன்மொழியப்பட்டனர்.

இதையடுத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதலாவதாக நடந்த இரகசிய வாக்கெடுப்பில் இருவரும் சம அளவு வாக்குகளை பெற்றனர். மீண்டும் இரண்டாவது  தடவையும், சம வாக்குகளையே இருவரும் பெற்றனர்.

இதனால் இரவு 11 மணி வரை நீடித்த நாடாளுமன்ற அமர்வில் மூன்றாவதாக இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார வெற்றி பெற்று சபாநாயகராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *