மேலும்

ரணிலை நீக்கும் முயற்சி பிசுபிசுப்பு – எதிர்ப்பு குறைகிறது

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை பிசுபிசுக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐதேக உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினருடன் இணைந்து, நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்றலாம் என்று கூட்டு எதிரணி கணக்குப் போட்டிருந்தது.

ஆனால் ,நம்பிக்கையில்லா பிரேரணைக்கு  ஐதேகவின் தலைமை மீது அதிருப்தி கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு, கிடைக்காது என்பது உறுதியாகியுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்க்கப் போவதில்லை என்று இன்று காலை அறிவித்த ஐதேக உறுப்பினரான அத்துரலியே ரத்தன தேரர், தாம் வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை என்று  இன்று மாலை அறிவித்தார்.

அதுபோலவே, ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய ஐதேகவைச் சேர்ந்த அமைச்சர்களான பாலித ரங்க பண்டாரவும், வசந்த சேனநாயக்கவும், நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக செய்தியாளர் சந்திப்பில் அறிவித்துள்ளனர்.

அதேவேளை, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் பிளவுபட்டுள்ளது. சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினர், வாக்கெடுப்பில் பங்கேற்கமாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

அமைச்சர்கள் நிமால் சிறிபால டி சில்வா, எஸ்.பி.திசநாயக்க போன்றவர்கள் இன்னமும் நாடாளுமன்றத்துக்கு வரவில்லை. அவர்கள் மற்றும் ஏ.எச்எம்.பௌசி போன்றவர்களில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலரும், இன்று இத்தாலிக்குப் பயணமாகியிருப்பதாக, ஜேவிபி உறுப்பினர் பிமல் ரத்நாயக்க கூறியிருந்தார்.

மகிந்த ராஜபக்ச இன்று காலை அமர்வில் பங்கேற்கவில்லை. மதியம் சபைக்கு வந்த அவர் ஒரு மணிநேரத்திலேயே வெளியே சென்று விட்டார்.

இதனால் கூட்டு எதிரணியைச் சேர்ந்தவர்களும் கூட முழுமையாக நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்கவின் நிலை வலுவடைந்துள்ளதுடன், நம்பிக்கையில்லா பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்படும் சூழ்நிலைகள் தோன்றியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *