மகிந்த அணிக்கு செக் வைக்கும் ஜேவிபி
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, கூட்டு எதிரணியினரால் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையில், ஜேவிபி கையெழுத்திடாது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பாரிய முறைகேடுகளுக்குப் பின்னால் இருந்தவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினார் என்ற குற்றச்சாட்டை பிரதமர் மீது முன்வைத்தால் மாத்திரமே, இந்தப் பிரேரணைக்கு ஜேவிபி ஆதரவு அளிக்கும் என்று கூறப்படுகிறது.
எனினும், மகிந்த ராஜபக்ச விசுவாசிகளைக் கொண்ட கூட்டு எதிரணி இந்தக் குற்றச்சாட்டை முன்வைப்பது சாத்தியமில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து தகவல் வெளியிட்ட ஜேவிபி மூத்த உறுப்பினர் ஒருவர், “நம்பிக்கையில்லா பிரேரணையின் உள்ளடக்கத்தைப் பொறுத்தே, என்ன செய்வது என்று முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பாரிய முறைகேடுகளை விசாரித்து குற்றவாளிகளைத் தண்டிக்கத் தாமதித்துள்ளதால் பிரதமர் மீது மக்கள் நம்பிக்கையிழந்துள்ளனர் என்றும் அவர் மக்களின் ஆணையை மீறியுள்ளார் என்றும் ஜேவிபி பிரமுகர் தெரிவித்துள்ளார்.