மேலும்

மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்

ananthasuthakar (3)பத்து வருடங்களாகச் சிறையில் வாடும்- ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் மனைவியின் இறுதி நிகழ்வு, உலகெங்கும் வாழும் தமிழர்களின் மனதை உலுக்கியிருக்கிறது.

அரசியல் கைதிகளினதும், காணாமல் ஆக்கப்பட்டவர்களினதும்  குடும்பங்கள் எதிர்கொள்ளும் துயர்களை வெளிப்படுத்தியிருக்கிறது இந்தத் துயிர் நிகழ்வு.

2008ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் வாடும், ஆனந்தசுதாகருக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்திருக்கிறது.

இரண்டு குழந்தைகளுடன் தனது கணவனின் விடுதலைக்காக போராடி வந்த, அவரது மனைவி யோகராணி கடந்த 15ஆம் நாள் நோயுற்ற நிலையில் மரணமானார்.

கிளிநொச்சி மருதநகரில் நேற்று நடந்த மனைவியின் இறுதி நிகழ்வில் பங்கேற்க 3 மணிநேரம் அனுமதிக்கப்பட்டார் ஆனந்தசுதாகர்.

பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்ட அவர் மனைவியின் உடலுக்கு இறுதிவணக்கம் செலுத்தியதுடன், தனது பிள்ளைகள் இருவருடனும், துயரைப் பகிர்ந்து கொண்டார்.

இறுதி நிகழ்வுக்குப் பின்னர், சிறைச்சாலை அதிகாரிகள் அவரை பேருந்தில் ஏற்றும் போது, ஆனந்தசுதாகரின் மகளும் அந்த வாகனத்தில் ஏறிய காட்சி அங்கிருந்தவர்களை மாத்திரமன்றி, அதுபற்றிய படங்களை ஊடகங்களில் பார்த்த உலகெங்கும் உள்ள தமிழர்களையும் கலங்க வைத்துள்ளது.

தாயை இழந்து விட்ட நிலையிலும், தந்தை இருந்தும் அவரது அரவணைப்பில் வாழ முடியாத நிலையிலும் இரு பிஞ்சுகள் அந்தரித்து நிற்கின்றன.

ananthasuthakar (1)ananthasuthakar (2)ananthasuthakar (3)ananthasuthakar (4)ananthasuthakar (5)ananthasuthakar (6)

ஆயுதப்போராட்டம் முடிந்து ஒன்பது ஆண்டுகளாகின்ற நிலையில், அரசியல் கைதிகளினதும், காணாமல் ஆக்கப்பட்டவர்களினதும் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் இவ்வாறான பல்வேறு சூழல்கள் உள்ளன.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்காமல், அரசியல் கைதிகளை விடுவிக்காமல், காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்படாமல் அல்லது அவர்களின் நி்லை வெளிப்படுத்தப்படாமல் இருப்பதால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நிம்மதியற்று வாழ்கின்றன.

இவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு தான் என்ன?

அரசியல் ரீதியாக இவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு என்ன செய்யலாம்?

சமூக ரீதியாக இவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு என்ன செய்யலாம்?

விவாதிக்கவும்- விரைவாக செயற்படவும் வேண்டிய தருணம் இது. இனிமேலும் தாமதிக்க முடியாது என்பதை நினைவுபடுத்தியிருக்கிறது இந்த துயிர் நிகழ்வு.

இதுவரை உறக்கத்தில் இருந்தவர்களைக் கூட இந்த துயரம் துயில் எழ வைத்திருக்கிறது.

வெறுமனே உணர்ச்சிபூர்வமான வார்த்தைகள் இவர்களைப் போன்றவர்களின் துயரைப் போக்காது.

இவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆக்கபூர்வமான வழிகளைத் தேட வேண்டும். அது அறிவுபூர்வமானதாக இருக்க வேண்டுமேயன்றி, அவசரத்தனமானதாகவோ, உணர்ச்சிவசப்பட்டதாகவோ இருத்தல் கூடாது.

இந்த விவகாரம் முள்ளில் விழுந்த சேலை போன்றது.

அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை, போர்க்குற்றங்களுக்கான நீதி என்பன ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பதை மறந்து விட முடியாது.

ஒரு பிரச்சினையைத் தீர்க்க முனையும் போது இன்னொன்று இடிக்கும். அதனை தட்டிவிட்டால், இன்னொரு தரப்பைப் பாதிக்கும். எனவே தான், இது அறிவுபூர்வமாக அணுகப்பட வேண்டியது.

அதற்கான தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நேற்றைய நிகழ்வு நினைவுபடுத்தியிருக்கிறது.

– ஆசிரியர் குழு

ஒரு கருத்து “மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்”

  1. GM says:

    பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி,அரசியல் கைதிகளை
    விடுதலை செய்தால் மீண்டும் ஒரு புரட்சி உருவாகும்.
    என்ற காரணமே!.
    ஏனென்றால், (அவர்கள்) நூற்றாண்டுகள் கடந்தாலும் மறக்க மன்னிக்க
    முடியாத ஒரு சொல் ……புலிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *