மேலும்

தேர்தலுக்கு முன் விவாதிக்க முடியுமா?- சவால் விடுகிறார் சிறிலங்கா அதிபர்

maithriஊழல் மோசடிகள் தொடர்பான அதிபர் ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் குறித்து உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த முடியுமா என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சவால் விடுத்துள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி குறித்து விசாரித்த ஆணைக்குழுவின் அறிக்கையையும், முன்னைய ஆட்சிக்கால மோசடிகள் குறித்து விசாரித்த ஆணைக்குழு அறிக்கையையும், பெப்ரவரி மாதம் 20ஆம், 21ஆம் நாள்களில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்தே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த அறிக்கைகள் தொடர்பாக உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர் விவாதம் நடத்த தயாரா என்று கூட்டு எதிரணி மற்றும் ஐதேகவிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

பாணந்துறையில் நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர்,

“இந்த அறிக்கைகளைப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று கோரியவர்கள், அது வெளிப்படுத்தப்பட்ட பின்னரும், விவாதத்தை நடத்த இழுத்தடிக்கின்றனர்.

முக்கிய பிரமுகர்களாக உள்ள திருடர்கள் தேர்தலுக்கு முன்னர் விவாதத்தை நடத்தாமல் தடுத்துள்ளனர்.

அரசாங்கத்திலும், எதிரணியிலும் உள்ள திருடர்கள் ஒன்று கூடிப் பேசி விவாதத்தை பிற்போட்டிருக்கிறார்கள். இதற்காக அவர்கள் முதல் நாள் தனியாகச் சந்தித்திருக்கிறார்கள்.

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்ட போது, மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் இருக்கவில்லை. பிரேரணைக்கு ஆதரவாக அவர் வாக்களிக்கவும் இல்லை.

வாக்கெடுப்பு முடிந்த பின்னர், ரவி கருணாநாயக்கவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருந்தார் மகிந்த ராஜபக்ச.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *