மேலும்

சட்டத்தை மீறும் வேட்பாளர்களுக்கு கடும் எச்சரிக்கை

mahinda deshapriyaஉள்ளூராட்சித் தேர்தல் பரப்புரையின் ஒரு அங்கமாக, தனிப்பட்ட அல்லது பொது நிதியில் இருந்து பணத்தையோ அல்லது பொருள் மானியத்தையோ வழங்கும் வேட்பாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய எச்சரித்துள்ளார்.

”தேர்தல் சட்டங்களின் படி தேர்தல் பரப்புரைகளின் போது வேட்பாளர்கள் மானியங்களை வழங்குவது சட்டவிரோதமாகும். அது ஒரு இலஞ்ச வழக்காக கருதப்படும்.

தேர்தல் திணைக்களத்தின் உத்தரவுகளை அரசாங்க அதிகாரியோ அல்லது அரசாங்க நிறுவனமோ, தேர்தல் சட்டங்களை மீறினால்,  அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

மத அமைப்புகளுக்கு நிதி வழங்குவது, கல்விக்கான பொருட்களை வழங்குவது போன்ற நடவடிக்கைகளில், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் ஈடுபடுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாக இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அரசாங்க நிதியிலான உதவிகளை பொதுமக்களுக்கு வழங்குவதை எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் நாள் வரை இடைநிறுத்தி வைக்குமாறு பிரதேச செயலகங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

களஞ்சியப்படுத்தி வைப்பதற்குச் சிக்கலான,  கால்நடைகள், தாவரங்கள், விதைகள் மற்றும் இதுபோன்ற பொருட்களை மாத்திரமம் விநியோகிக்குமாறு பிரதேச செயலகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

ஏனைய களஞ்சியப்படுத்தக் கூடிய பொருட்களின் விநியோகங்களை பெப்ரவரி 15 வரை நிறுத்தி வைக்குறுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

அத்துடன், குறிப்பிட்ட அரசியல் கட்சிகளால் வாக்குகளுக்காக வழங்கப்படும் அரச நிதியிலான உதவிகளை பொதுமக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டாம்.

இந்த உதவிகளை அரசாங்கத்திடம் இருந்து பெறும் உரிமை இருக்கிறது என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இவை அரசாங்க நிதியில் இருந்தே வழங்கப்படுகின்றன என்பதை அவர்கள் அறிய வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *