மேலும்

வடக்கின் தேவைகளை அறியும் குழுவை அனுப்புகிறார் மலேசியப் பிரதமர்

cm- najib razakவடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை மற்றும் அங்குள்ள தேவைகள்  குறித்து ஆராய்ந்து தகவல்களைத் திரட்டுவதற்காக, சிறிலங்கா அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன், தமது நாட்டின் குழுவொன்றை அனுப்பவுள்ளதாக மலேசியப் பிரதமர்  அப்துல் நஜீப் ரசாக் உறுதியளித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை, கொழும்பில் உள்ள விடுதியொன்றில் நேற்றுக்காலை சந்தித்துப் பேச்சு நடத்திய போதே அவர் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.

சுமார் 45 நிமிடங்கள் வரை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து, மலேசிய பிரதமருக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் எடுத்துரைத்துள்ளார்.

“சுமார் 62 ஆயிரம் ஏக்கர் காணிகளில் சிறிலங்கா படையினர் நிலைகொண்டுள்ளனர். சுமார் 5000 ஏக்கர் காணிகள் மட்டுமே இதுவரையில் விடுவிக்கப்பட்டுள்ளன.

வணிகம், மீன்பிடி, விவசாயம், சுற்றுலா போன்ற துறைகளில் சிறிலங்கா படையினரின் கையே ஓங்கியுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட 49 ஆயிரம் பெண் தலைமைத்துவ குடும்பங்களும், சுமார் 11 ஆயிரம் முன்னாள் போராளிகளின் குடும்பங்களும், சிறப்புத் தேவையுடையோர்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு சுழலும் நிதியத்தை ஏற்படுத்தினால் உதவியாக இருக்கும்” என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

cm- najib razak

இதற்குப் பதிலளித்த மலேசிய பிரதமர், “இவ்வாறான சுழலும் நிதியம் தமது நாட்டில் ஏற்படுத்தப்பட்டதாகவும், வசதி குறைந்தவர்களுக்கு அது நன்மைகளைப் பெற்றுக் கொடுத்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வீடமைப்பு தேவைப்பாடு மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்தும் மலேசிய பிரதமருக்கு முதலமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

இந்தநிலையில், வடக்கு மாகாணத்தில் தற்போதைய நிலைமைகள், அங்குள்ள தேவைகள் குறித்து தகவல் சேகரிக்கும் குழுவை சிறிலங்கா அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன், மலேசியாவில் இருந்து அனுப்புவதாக மலேசியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

எந்தெந்தத் துறைகளில் உதவிகளை வழங்க முடியும், முதலீடுகள் செய்ய முடியும் என்பதை அந்தக் குழு ஆராய்ந்து தமக்கு அறிக்கை சமர்ப்பித்த பின்னர், உரிய நடவடிக்கை எடுப்பதாக மலேசியப் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *