மேலும்

ஈபிஆர்எல்எவ் – தமிழ் காங்கிரஸ் உறவில் விரிசல் : சங்கரியுடன் சேருகிறார் சுரேஸ்

suresh-kajendrakumarஉள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்க் காங்கிரஸ் – ஈபிஆர்எல்எவ் இணைந்து பொதுச்சின்னத்தில் போட்டியிடும் முயற்சி தோல்வியடைந்துள்ள நிலையில், ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடும் முயற்சியில் ஈபிஆர்எல்எவ் இறங்கியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக, தமிழ் மக்கள் பேரவையில் இடம்பெற்றுள்ள தமிழ்க் காங்கிரஸ், ஈபிஆர்எல்எவ் ஆகிய கட்சிகளும், சில அமைப்புகளும் இணைந்து கூட்டணி ஒன்றை உருவாக்கிப் போட்டியிட முடிவு செய்திருந்தன.

இந்தக் கூட்டணிக்கு பொதுச் சின்னம் மற்றும் பொதுப் பெயர் ஒன்றைப் பெறும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே விண்ணப்பித்ததால், பொதுப்பெயர், பொதுச் சின்னத்தை வழங்க முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதனால், தமிழ்க் காங்கிரசின் மிதிவண்டி அல்லது ஈபிஆர்எல்எவ்வின் மலர் சின்னத்தில் ஏதேனும் ஒன்றில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும், மிதிவண்டிச் சின்னத்தில் போட்டியிட ஈபிஆர்எல்எவ் மறுத்துள்ளது. தமிழ்க் காங்கிரஸ் கட்சியும், மலர் சின்னத்தில் போட்டியிட தயக்கம் வெளியிட்டுள்ளது.

இதனால் இருகட்சிகளுக்கும் இடையிலான பேச்சுக்களில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஈபிஆர்எல்எவ் முயற்சித்து வருவதாக, தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டத்தை நிராகரிக்கும், விடுதலைப் புலிகளின் காலத்திலேயே அவர்களுடன் முரண்பட்டுக்கொண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடியாமல் தடுத்த, தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் ஈபிஆர்எல்எவ் இணைந்து போட்டியிட முயற்சிப்பது துரதிஷ்டம் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *