மேலும்

தாய்வான் வங்கி மோசடி – மைத்திரி போட்டியிட்ட அன்னத்தின் உரிமையாளர் கைது

Shalila Moonasingheதாய்வான் வங்கி ஒன்றில் இருந்து சட்டவிரோதமாக 1.1 மில்லியன் அமெரிக்க டொலரை, சிறிலங்காவில் உள்ள தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றிய குற்றச்சாட்டில், லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவரும், புதிய ஜனநாயக முன்னணியின் தலைவருமான சாலிலா முனசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

இணைய மோசடிகளின் மூலம் தாய்வானின் தூரகிழக்கு அனைத்துலக வங்கியின் 60 மில்லியன் டொலர்  சிறிலங்கா, கம்போடியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள பல்வேறு வங்கிக்கணக்குகளுக்கு மாற்றப்பட்டது.

சாலிலா முனசிங்கவின் வங்கிக் கணக்கிற்கும் 1.1 மில்லியன் டொலர் பணம் மாற்றப்பட்டிருந்தது. இது தொடர்பாக சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நடத்தி லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவரான சாலிகா முனசிங்கவை நேற்று கைது செய்தனர்.

இவர், முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினாலேயே இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

2015 அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன, சாலிலா முனசிங்கவின் தலைவராகக் கொண்ட புதிய ஜனநாயக முன்னணியின் அன்னம் சின்னத்திலேயே பொதுவேட்பாளராகப் போட்டியிட்டிருந்தார்.

2009 ஆம் ஆண்டு புதிய ஜனநாயக முன்னணியை உருவாக்கிய சாலிலா முனசிங்கவின் அன்னம் சின்னத்திலேயே 2010ஆம் ஆண்டு சரத் பொன்சேகாவும் அன்னம் சின்னத்தில் போட்டியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *